Published : 12 Mar 2018 01:41 PM
Last Updated : 12 Mar 2018 01:41 PM

குரங்கணி காட்டுத்தீ எதிரொலி; வனப்பகுதிக்குள் நுழைய சுற்றுலாப் பயணிகளுக்கு தடை: கேரள அரசு அதிரடி உத்தரவு

 

தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மலைஏற்றம் சென்ற 36 பயணிகளில் 9 பேர் பலியானதைத் தொடர்ந்து, வனப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகள் நுழைய கேரள அரசு அதிரடியாகத் தடைவிதித்துள்ளது.

சென்னையில் இருந்து 24 பேரும், ஈரோடு,திருப்பூர் பகுதியைச் சேர்ந்த 12 பேரும் தேனி மாவட்டம் , போடி அருகே குரங்கணி வனப்பகுதிக்கு மலைஏற்றம் சென்றனர். இவர்கள் சென்ற கொழுக்குமலை வனப்பகுதி கேரள வனத்துறைக்கும், தமிழக வனத்துறைக்கும் இடைப்பட்ட பகுதியாகும்.

இந்த வனப்பகுதியில் சாகசப் பயணிகள் குழு மலைஏற்றம் செய்துவிட்டு இறங்கும் போது, காட்டுத் தீயில் சிக்கியுள்ளனர். இதில் காட்டுத்தீயில் இருந்து எப்படி தப்பிப்பது எப்படி எனத் தெரியாமல் ஏறக்குறைய 9 பேர் உடல்கருகி பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து அறிந்து, அங்கு நடந்த தீவிர மீட்புப்பணிக்கு பின் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்புப்பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த மீட்புப் பணியில் தமிழக வனத்துறை, தீயணைப்பு துறை ஆகியவற்றோடு கேரள வனத்துறையும் இணைந்து மேலும், யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று தேடுதல் பணியிலும், மீட்புப்பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரள அரசு இன்று அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் கேரள வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. மலை ஏற்றம் செல்பவர்கள், இயற்கை பயணத்தை அனுபவிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் இனி அனுமதி இல்லாமல் கேரள வனப்பகுதிக்குள் செல்ல முடியாது. அவ்வாறு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x