Published : 12 Mar 2018 09:16 AM
Last Updated : 12 Mar 2018 09:16 AM

பெற்றோர் விவாகரத்து வழக்கில் சுமுக தீர்வு: நீதிபதிகளுக்கு சிறுவன் நன்றி கடிதம்

தனது பெற்றோர் விவாகரத்து தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து, நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்த சிறுவனின் குறிப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அங்கமாக மாறி உள்ளது.

ஒரு தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக 2011-ல் பிரிந்து வாழ்ந்து வந்தனர். விவாகரத்து வழக்கு மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி 23 வழக்குகளை தொடுத்திருந்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் மோகன் சந்தானகவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த தம்பதியின் சண்டையில் அவர்களது ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் சிக்கி தவித்தன.

இந்நிலையில் தமது மனக் கசப்புகளை மறந்து அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதாக நீதிமன்றத்தில் தம்பதியினர் தெரிவித்தனர். இதையடுத்து தம்பதியின் 10 வயது மகன், நன்றி தெரிவித்து எழுதிய ஒரு குறிப்பை நீதிபதிகளிடம் சமர்ப்பித்துள்ளான்.

‘இறைவன் உங்களுக்கு எப்போதும் ஏதாவது ஒன்றை வைத்திருப்பார்’ என தொடங்கும் அந்த குறிப்பை, நீதிமன்றத்தில் படித்துப் பார்த்த நீதிபதி குரியன் ஜோசப் புன்னகைத்தார். இறுதியில் இருவரது சம்மதத்துடனும் விவாகரத்து வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அந்த சிறுவனின் குறிப்பை ஸ்கேன் செய்து தங்களது தீர்ப்பின் ஒரு அங்கமாக பதிவு செய்து, அதை, ‘நீதிமன்றம் மீதான மிக உயர்வான புகழுரை’ எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிபதி குரியன் ஜோசப் கூறும்போது, “ஒரு சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜராகி, தனது தாய், தந்தைக்கிடையிலான பிரச்சினையும் வழக்குகளும் முடிவுக்கு வருவதற்காக மகிழ்ச்சி தெரிவிக்கும் குறிப்பை சமர்ப்பிக்க அனுமதி கோரியது நெகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x