Published : 12 Mar 2018 08:42 AM
Last Updated : 12 Mar 2018 08:42 AM

உலக நாடுகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத சோலார் புரட்சி ஏற்பட வேண்டும்: சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

உலகம் முழுவதும் சோலார் புரட்சி ஏற்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு கடந்த 2015-ம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்கப்பட்டது. இதில் 121 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைமை அலுவலகம் டெல்லி அருகேயுள்ள குர்காவ்ன் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முதல் உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் மற்றும் 23 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

பருவநிலை மாற்றம் உலகின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கு பண்டைய வேத நூல்களில் தீர்வு கூறப்பட்டிருக்கிறது. ‘உலகின் ஆன்மா சூரியன்’ என்று வேதங்கள் குறிப்பிட்டுள்ளன. அதன்படி உலக நாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சூரிய ஒளி மின் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்.

குறைந்த செலவில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இதற்கு தேவையான தொழில்நுட்பம், நிதியுதவி அனைத்து நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும்.

உலகம் ஒரு குடும்பம். மனித குல நன்மைக்காக உலகளாவிய அளவில் சோலார் புரட்சி ஏற்பட வேண்டும். டெல்லியில் அமைக்கப்பட்டிருக்கும் தலைமை அலுவலகம் முன்னோடியாக, வழிகாட்டியாக செயல்படும்.

வரும் 2022-ம் ஆண்டில் இந்தியாவில் மரபுசாரா மின்உற்பத்தி 175 ஜிகாவாட்டாக உயரும். இதில் 100 ஜிகாவாட் சூரிய ஒளி மின்சாரமாக இருக்கும்.

மின்சாரத்தை சேமிக்க நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 28 கோடி எல்இடி விளக்குகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 4 ஜிகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாரிஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தம் கடந்த 2016 நவம்பர் 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. டெல்லி மாநாட்டில் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

அவர் கூறியபோது, “சில நாடுகள் சுயலாபத்துக்காக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிவிட முடிவு செய்துள்ளன. எனினும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாரிஸ் ஒப்பந்தத்தை அமல் செய்வதில் உறுதியுடன் செயல்படுகின்றன. சூரிய ஒளி மின்உற்பத்தி திட்டத்தில் தனியார் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x