Last Updated : 23 Feb, 2018 06:42 PM

 

Published : 23 Feb 2018 06:42 PM
Last Updated : 23 Feb 2018 06:42 PM

முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் மக்கள் பணத்தை வீணடிப்பது பாஜகவின் பாணி: மாயாவதி சாடல்

முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் கோடிக்கணக்கான பொதுப் பணத்தை வீணடிப்பது பாஜகவின் பாணியாகிவிட்டது என்று உ.பி. அரசின் செயல்பாடுகள் குறித்து மாயாவதி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

உ.பி.யில் நடைபெற்று வந்த இரண்டுநாள் முதலீட்டாளர்கள் மாநாடு முடிவுற்ற நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான மாயாவதி அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்கவே மக்களை திசை திருப்புவதற்காக நடத்தப்படுகிறது என்று கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

"முதலீட்டார்கள் மாநாடு என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சி அரசுகள் இது போன்று பொதுப் பணத்தை வீணடிப்பது ஒரு பாணியாகிவிட்டது.

இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு கோடிக்கணக்கான பொதுப்பணத்தை விரயம் செய்வதைவிட ஏழைகள், விவசாயிகள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கான நலனை உறுதி செய்வதற்கான முக்கியமான பணிகளுக்கு செலவிடலாம்.

இது போன்ற நிகழ்ச்சிகளின்மூலம், உத்தரப் பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ள நிலை, பணவீக்கம், விலை உயர்வு மற்றும் வேலையின்மை போன்ற அதிமுக்கியமான சிக்கலான பிரச்சனைகளிலிருந்து பொது மக்களின் கவனம் ஒட்டுமொத்தமாக திசை திருப்பப்படுகிறது.

மேலும், இம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமானநிலையில் உள்ள காரணத்தால் தனியார் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இங்கு செலவிட துணிய மாட்டார்கள்.

நாடு எதிர்கொள்ளும் சவால்கள், தீவிர சிக்கல்களை தீர்ப்பதிலோ மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துதலிலோ மத்திய அரசும் உ.பி. மாநில அரசும் இரண்டும் மிக மோசமான அளவில் தவறிவிட்டன

பல கோடி ரூபாய்களுக்கு மத்திய அமைச்சர் கையொப்பமிட்டிருக்கிறார் என்று கூறி, பாஜக மீண்டும் மக்களை முட்டாளாக்க பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

வெளிநாட்டிலிருந்து கருப்பு பணத்தை மீட்டுவந்து, மக்களின் வங்கி கணக்குகளில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்ற நரேந்திர மோடியின் வாக்குறுதியை 2014 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தலில், பாஜக நினைவு படுத்தியது.

முதலில், பாஜக முன்னர் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதன்பிறகே எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனைகளை செய்ததாகக் கூறிக்கொள்ளமுடியும்.

இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் முதலீட்டாளர்கள் சந்திப்பில் 1,200 க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களுக்கான குறிப்பாணைகள் கையெழுத்தாயின. இவற்றில் ரூ. 4.35 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளன. இம்மாநாட்டில் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, சுபாஷ் சந்திரா மற்றும் ஆனந்த் மஹிந்திரா போன்ற தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x