Published : 23 Feb 2018 05:56 PM
Last Updated : 23 Feb 2018 05:56 PM

நிரவ் மோடி மோசடி எதிரொலி: 1,415 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்தது பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11,500 கோடி ரூபாய் மோசடியை அடுத்து, அந்த வங்கி ஊழியர்கள் 1,415 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் 11,500 கோடி மோசடி நடந்ததது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. இதுதொடர்பாக தொழிலதிபர் நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

அவரது சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பஞ்சாப் நேஷனல் வங்கி பெரும் நஷ்டத்திற்கும், நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொழிலதிபர்களுடன் சேர்ந்து, வங்கியின் ஊழியர்கள் சிலரும் ஈடுபட்டதையும் சிபிஐ உறுதி செய்துள்ளது. ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மோசடிக்கு துணை போன ஊழியர்கள் மீது சிபிஐ மட்டுமின்றி வங்கி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வங்கியின் மும்பை கிளை மட்டுமின்றி மற்ற இடங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிது. இதை தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியில் இருக்கும் ஊழியர்களை இட மாற்றம் செய்ய பஞ்சாப் நேஷனல் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளி வந்தன.

ஏறக்குறைய 18,000 ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், 1,415 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து பஞ்சாப் நேஷனல் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கமான சுழற்சி அடிப்படையில் ஊழியர்கள் மாற்றப்படும் திட்டத்தின் கீழ் இவர்கள் மாற்றப்படுவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

257 கீழ் நிலை ஊழியர்கள், 437 அதிகாரிகள் அல்லாத ஊழியர்கள், 721 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரி 19ம் தேதி முதல் இவர்களுக்கு பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x