Published : 23 Feb 2018 02:00 PM
Last Updated : 23 Feb 2018 02:00 PM

ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் பேய் நடமாட்டம்: அடுத்தடுத்த மரணத்தால் அலறும் பாஜக எம்எல்ஏக்கள்

 ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் மரணமடைந்ததால், அம்மாநில தலைமைச் செயலகத்தில் பேய், ஆவிகள் நடமாடுவதாக எம்எம்எல்ஏக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் பாஜகவைச் சேர்ந்த வசுந்தரா ராஜே முதல்வராக உள்ளார். இந்த ஆண்டு அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பணிகளில் ஆளும் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் மண்டேல்கர் தொகுதி எம்எல்ஏ கீர்த்தி குமாரி கடந்த ஆண்டு பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார். அதுபோலவே நத்வாரா எம்எல்ஏ கல்யாண் சிங் நீண்டகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த புதனன்று உயிரிழந்தார். எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதால் ஆளும் கட்சியினரிடையே பயம் ஏற்பட்டுள்ளது.

மாநில தலைமைச் செயலகத்தில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும், துர் ஆவிகள் இருப்பதாகவும் பாஜக எம்எல்ஏக்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து நகவூர் தொகுதி பாஜக எம்எல்ஏ ஹபிபூர் ரஹ்மான் கூறியதாவது:

‘‘ராஜஸ்தான் அரசின் தற்போதைய தலைமைச் செயலகம் உள்ள இடம் ஒரு காலத்தில் இடுகாடாக இருந்துள்ளது. இதனால் அங்கு ஆவிகள் மற்றும் பேய் நடமாட்டம் இருக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக பல எம்எல்ஏக்களும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே தலைமைச் செயலகத்தில் இருந்து ஆவிகளை வெளியேற்றி, சுத்தப்படுத்தும் பணி அவசியமாக செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளில் முதல்வர் வசுந்தரா ராஜே எடுக்க வேண்டும்’’ எனக்கூறினார்.

இதுபோலவே சட்டப்பேரவை அரசு கொறாடா கலுலால் குஜ்ஜார் கூறியதாவது:

‘‘புதிய தலைமைச் செயலகத்திற்குள் பேய் இருப்பதை பல எம்எல்ஏக்களும் உறுதியாக கூறுகின்றனர். அவர்களது அச்சத்தை போக்க வேண்டியது மாநில அரசின் கடமை. எனவே அங்கு யாகம் நடத்தி பேயை விரட்ட வேண்டும். இதுதொடர்பாக முதல்வர் மட்டுமின்றி சட்டப்பேரவை சபாநாயகருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இதனை செய்து முடிக்க வேண்டும்’’ எனக்கூறினார்.

ராஜஸ்தான் மாநில புதிய தலைமைச் செயலகம் 2001ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x