Published : 23 Feb 2018 12:43 PM
Last Updated : 23 Feb 2018 12:43 PM

பழங்குடி வகுப்பைச் சேர்ந்த 27 வயது வாலிபர் அடித்துக் கொலை: கேரளாவில் கொடூரம்; முதல்வர் கண்டனம்

கேரள மாநிலம், பாலக்காடு அருகே அட்டப்பாடியில் கடுகுமன்னா பகுதியில் திருடன் என்று குற்றம்சாட்டி 27 வயது பழங்குடி வகுப்பைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை உள்ளூர் மக்கள் அடித்தே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட வாலிபர் பெயர் ஏ.மது, கடுகுமன்னா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்.

கடந்த வியாழன் மாலை 6.30 மணியளவில் மது என்பவரை கன்னாபின்னாவென்று கம்புகளால் அடித்து உருக்குலைந்த நிலையில் அகாலி போலீஸிடம் ஒப்படைத்தனர்.

போலீஸார் இவரை கொட்டாதராவில் உள்ள பழங்குடி சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஜீப்பில் ஏற்றியுள்ளனர், ஆனால் ஜீப்பிலேயே நிலைமயங்கி விழுந்த அவர் இறந்தே போனார்.

உள்ளூர் மக்கள் இவரை அருகில் உள்ள காட்டில் மாலை 4 மணிக்குப் பிடித்தனர். 3 நாட்களுக்கு முன்பாக கிராமத்தில் ஒருவர் வீட்டிலிருந்து மதிப்பு மிக்க பொருட்களைத் திருடிச் சென்றதாக இவரைக் குற்றம்சாட்டி கன்னாபின்னாவென்று தாக்கியுள்ளனர்.

இதில் மது மரணமடைந்ததையடுத்து இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மதுவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு மாலை 7 மணிக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. மது மனநிலை சரியில்லாதவர் என்றும் எப்போதாவது காட்டில் அவர் வசிப்பதுண்டு என்று அகாலி உதவி எஸ்.பி. என்.சுப்பிரமணியன் தெரிவித்தார். மதுவுக்கு அவரது குடும்பத்தினருடன் தொடர்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னணி:

அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது. வியாழன் மாலை உள்ளூர் மக்கள் இவரை காட்டருகே கண்ட போது இவரிடம் அரிசி மூட்டை இருந்துள்ளது.

தவாலம், முக்கலி பகுதிகளில் உணவுப்பொருட்கள் திருட்டு கொஞ்ச நாட்களாக நடந்து வந்துள்ளது. சிசிடிவி கேமராவில் களவில் ஈடுபட்டவரின் படம் பதிவாகியுள்ளது. இந்நிலையில்தான் சிசிடிவி கேமரா படமும் மதுவின் படமும் ஒன்றாக இருந்துள்ளன.

மேலும் இவரிடம் அரிசி மூட்டையும் இருந்ததால் மக்களுக்கு சந்தேகம் எழ போலீஸில் ஒப்படைக்காமல் அவரை அடித்து நொறுக்கி பிறகு போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர், இதனால் நிலைகுலைந்த இவர் உயிர் போலீஸார் ஜீப்பிலேயே பிரிந்தது.

இந்தச் சம்பவம் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவலாக கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஜாய் மேத்யூ, பழங்குடி நல சமூக ஆர்வலர் சி.கே.ஜானு ஆகியோர் இந்த கொலைக்குக் காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

போலீஸார் 15 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முதல்வர் பினராயி விஜயன் இந்த சம்பவத்துக்குக் கண்டனம் வெளியிட்டு போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அவர் தன் முகநூல் பக்கத்தில், “நாகரீக சமூகத்தில் இத்தகைய கொடுஞ்செயல்களை அனுமதிக்க முடியாது. கேரள மாநிலத்துக்கு இழுக்கு சேர்த்துள்ளது இந்தச் சம்பவம்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x