Published : 21 Feb 2018 10:14 PM
Last Updated : 21 Feb 2018 10:14 PM

மீட்டர் வட்டிக்கு கடன் கொடுக்கும் பிச்சைக்காரர்கள்: கட்டுப்படுத்த முடியாமல் ஹைதராபாத் போலீஸார் புலம்பல்

 தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் 100 பிச்சைக்காரர்கள் வரை மீட்டர் வட்டிக்கு நாள்தோறும் கடன் கொடுத்து வருகின்றனர். இவர்களைப் பிடித்து மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்தாலும்,மீண்டும் வந்து பிச்சை எடுப்பதாக போலீஸார் புலம்புகின்றனர்.

ஹைதராபாத்தில் பிச்சைக்காரர்களை ஒழிக்கும் வகையில், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையத்தை சாஞ்சல்குடா சிறையில் தெலங்கானா சிறைத்துறை நடத்தி வருகிறது. ஆனால் இந்த மறுவாழ்வு இல்லத்துக்கு பிச்சைக்காரர்களை கொண்டுவந்து போலீஸார் சேர்த்தாலும் அவர்கள் அங்கிருந்து தப்பித்து மீண்டும் பிச்சை எடுத்து வருகின்றனர்.

ஹைதராபாத்தின் நம்பள்ளி பகுதியில் உள்ள தர்கா யூசுபைன் ஷிரிபைன், பதேர்காட்டி பகுதியில் உள்ள மெக்கா மஸ்ஜித், கோல்கொண்டா தர்ஹா, தர்ஹா ஹஸ்ரத் பாபா சர்புதீன், கச்சேகுடா ரயில் நிலையம், பிர்லா மந்திர், அஸ்டலட்சுமி கோயில், கர்மங்கட் கோயில் ஆகிய இடங்கள் பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்கும் முக்கிய இடமாக இருந்து வருகிறது.

ஒரு பிச்சைக்காரர் நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பிச்சைஎடுக்கிறார். அந்தப் பணத்தை 24 மணிநேரத்துக்குள் திருப்பிக் கொடுக்கும் வகையில் வட்டிக்கு கடன் கொடுக்கிறார். பிச்சைக்காரர்களிடம் கடன் வாங்குபவர்கள் திருப்பிக் கொடுக்கும்போது, ரூ.500 முதல் ரூ.1000 வரை சேர்த்துக் கொடுக்கிறார்கள்.

ஏறக்குறைய 100 பிச்சைக்காரர்கள் ஹைதராபாத்தின் பதேர்காட், புரானா புல், ஜும்மீரட் பஜார், மதினா சர்க்கில் ஆகிய பகுதிகளில் உள்ள சிறுகடைகள், வியாபாரிகளுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார்கள்.

தாங்கள் வட்டித்தொழில் செய்வதையாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அதிகாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் பணம் கொடுப்பதையும், வசூலிப்பதையும் பிச்சைக்காரர்கள் ரகசியமாக செய்து வருகின்றனர்.

இது குறித்து தெலங்கானா சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையம் ஆனந்தா ஆஸ்ரமத்தில் செயல்பட்டு வருகிறது. ஏறக்குறைய 180 பிச்சைக்காரர்கள் வரை இருக்கிறார்கள். இதற்கு முன் 200 பிச்சைக்காரர்கள் வரை இருந்தனர். ஆனால்,பிச்சைக்காரர்களின் உறவினர்கள் உரிய ஆவணங்களையும், அடையாள அட்டையையும் காண்பித்து அவர்களை அழைத்துச் சென்றுவிட்டனர். இவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைத்துக் கொடுத்தும் தொடர்ந்து பிச்சை எடுப்பதையே விரும்புகிறார்கள். அதையும் மீறி பிடித்து இழுத்து வந்தால், எங்களுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களைத் தெரியும் அவர்களிடம் புகார் செய்துவிடுவோம் எனக் கூறுகின்றனர்'' என்று தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x