Last Updated : 21 Feb, 2018 05:05 PM

 

Published : 21 Feb 2018 05:05 PM
Last Updated : 21 Feb 2018 05:05 PM

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து

சமஸ்கிருதத்தை விட பழமையானது தமிழ் என பிரதமர் நரேந்திர மோடி கூறியதை வடமாநில பேராசிரியர்கள் ஏற்க மறுத்துள்ளனர். அரசியல் ஆதாயம் தேடுவதற்கான அவரது கருத்தால் சமஸ்கிருதம் பழமையானது என்பதில் தாக்கம் ஏற்படாது எனவும் அவர்கள் ’தி இந்து’விடம் கருத்து கூறி உள்ளனர்.

இன்று தாய் மொழி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி கூறியதன் மீது வட மாநிலங்களில் உள்ள மத்திய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலரின் கருத்தை அறிய முயன்றபோது அவர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பேராசிரியர் டி.பி.துபே, வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை, அலகாபாத் மத்திய பல்கலைகழகம், அலகாபாத்: தமிழும் ஒரு புராதன மொழி. உலகின் மொழிகள் அனைத்திலும் சமஸ்கிருதம் பழமையானது என சர்வதேச அளவில் ஏற்கப்பட்டுள்ளது. இதன் மீதான ஆய்வுக்கட்டூரைகள் சர்வதேச ஆய்வு இதழ்களில் வெளியாகி உள்ளன. இதனால், இன்றும் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் சமஸ்கிருதமே பழமையானது என போதிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் கூறியது அரசியல் ஆதாயம் தேடுவதற்கானக் கருத்து. வட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி விட்டு எந்த ஒரு அரசியல் கட்சியும் தென் இந்தியாவிலும் அதை விரும்பும். எனவே, தென்மாநில மக்களை மகிழ்விக்க பிரதமர் தன் கருத்தை கூறியுள்ளார். இதுபோல், அரசியல் ஆதாயம் தேட கூறப்படுவது முதன்முறையல்ல. காங்கிரஸ், இடதுசாரிகளும் மத்தியில் தம் ஆதிக்கம் இருந்தபோது வரலாற்றை திரிக்க முயன்றுள்ளன. எனவே, இதன் மீது எங்களிடம் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. பிரதமர் கருத்தை எங்களால் ஏற்க முடியாது.

பேராசிரியர்.கவுசலேந்திரா ’பாண்டே, சமஸ்கிருத மொழித்துறை, பனாரஸ் இந்து பல்கலைகழகம், வாரணாசி: தனக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பிரதமர் கூறியது ஞானக்கருத்து. அவர் இந்நாட்டின் மதிப்புற்குரிய பிரதமர் என்பதாலும், அவர் மீதுள்ள மதிப்பாலும் அவரது கருத்தை நாம் விமர்சிக்க மாட்டோம். ஆனால், ஒரு மொழி பேராசிரியர் எனும் வகையில் சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி உலகில் எதுவும் இல்லை. நூறுசதவிகிதம் எந்த குறையும் இல்லாத ஒரே மொழியான சமஸ்கிருதத்தில் இருந்து தான் உலகின் மற்ற அனைத்து மொழிகளும் உருவானது. இதன் ஆதாரமாக அனைத்து மொழிகளிலும் சமஸ்கிருதத்தின் தாக்கம் இருப்பதை காணலாம். இதை மாணவர்களுக்கு எடுத்துக் கூறுவது தொடரும்.

பேராசிரியர்.அலி ஆர்.ஃபத்தீ, மொழியியல் துறை, அலிகர் முஸ்லீம் பல்கலைகழகம், அலிகர்: பிரதமர் மோடி கூறியதில் ஏதாவது ஒரு உண்மை இருக்கலாம். ஏனெனில், சமஸ்கிருதத்தை விட பழமையான சில எழுத்துக்களுடன் தமிழுக்கு ஒற்றுமை உள்ளது. ஆனால், பிரதமர் மோடி ஒரு அறிஞர் அல்ல என்பதால் அவரது கருத்தை கல்வியாளர்களால் ஏற்க முடியாது. அவருக்கு ஒரு அரசியல் உள்ளது. எனவே, எங்களிடம் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் தான் எதைவும் நாம் நம்ப முடியும். இந்த இரண்டில் பழமையான மொழி எது என்பதில் இன்னும் சர்ச்சைகள் நீடிக்கின்றன. ஒரு மொழி தோன்றிய காலத்தை நிரூபிப்பது மிகவும் கடினம். இது அவ்வப்போது கிடைக்கும் புதிய ஆய்வுகளின் அடிப்படையில் மாறிக் கொண்டிருக்கும்.

பேராசிரியர்.ரமாகாந்த் பாண்டே, இயக்குநர், ராஷ்ட்ரிய சன்ஸ்கிரித் சன்ஸ்தான், தொலைதூரக்கல்வி நிகர்நிலைப் பல்கலைகழகம், டெல்லி: தென் மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அவரவரிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தமிழ் அல்லது சமஸ்கிருதம் பழமையானது எனக் கூறுகின்றனர். என்னை பொறுத்தவரை சமஸ்கிருதம்

உலகின் பழமையான மொழி. ஆய்வுகளின் அடிப்படையில் பழமையான மொழி எது என கண்டறிவது ஒரு தனிப்பிரச்சனை. ஆனால், பெரும்பாலானவர்கள் தமிழை விட சமஸ்கிருதமே பழமையானதாக நம்புகின்றனர். மொழிகள் பற்றி ஆய்வது பிரதமரின் பணி அல்ல. அவர் எதன் அடிப்படையில் இவ்வாறு கூறினார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும். இது ஒருவேளை அவரது வாய்தவறி வந்திருக்கலாம். ஆனால், அவர் கூறியதை ஆதாரமாக்கி கல்வியாளர்கள் தமிழ் தொன்மையானது எனக் குறிப்பிட முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x