Last Updated : 21 Feb, 2018 02:22 PM

 

Published : 21 Feb 2018 02:22 PM
Last Updated : 21 Feb 2018 02:22 PM

நிரவ் மோடி மோசடி; சிறப்பு புலனாய்வு குழு அமைக்க தேவையில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி நிரவ் மோடி மோசடி செய்தது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக சிபிஐ ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில், வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.11,400 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐயிடம் வங்கி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதேபோல, நிரவ் மோடியின் வர்த்தகக் கூட்டாளி மெகுல் சோக்சி மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை ரூ. 5 ஆயிரத்துக்கும் அதிகமான நிரவ் மோடியின் சொத்துக்களை சிபிஐ முடக்கி உள்ளது.

கோடிக்கணக்கில் நடந்த மோசடி குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர்கள், வினீத் தண்டா, ஏ.எல். சர்மா ஆகியோர் பொதுநலன் மனுத் தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த மனுவில், பஞ்சாப் நேஷனல் வங்கி, ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம், சட்டத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டு, அடுத்த 2 மாதங்களுக்குள் நிரவ் மோடியை இந்தியா அழைத்து வர நடவடிக்க எடுக்க வேண்டும். நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் மீதான மோசடி குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். பஞ்சாப் வங்கியின் மேலாண்மை பொறுப்பில் இருந்த மூத்த அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தனர்.

நிதி அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு, மிகப்பெரிய தொகையை கடனாக அளிக்கும்போது, பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்து நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிடவும் உத்தரவிட அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ கான்வில்கர், டி.ஓய் சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், ‘நிரவ் மோடி, முகுல் சோக்சி மீதான மோசடி புகார் தொடர்பாக சிபிஐ ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அப்படி இருக்கும்போது, அதை விசாரிக்க தனியாக ஒரு சிறப்பு விசாரணை அமைப்பு உருவாக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கடுமையாக எதிர்க்கிறது’ எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘தற்போது நாளேடுகளில் வரும் செய்தியைப்படித்துவிட்டு, அது தொடர்பாக பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது பேஷனாகப் போய்விட்டது. நிரவ் மோடி மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திவரும்போது, புதிதாக ஒரு அமைப்பு மூலம் விசாரணைக்கு கோருவது சரியல்லை ‘என்று கூறி விசாரணையை மார்ச் மாதம் 16-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x