Published : 19 Feb 2018 01:03 PM
Last Updated : 19 Feb 2018 01:03 PM

அழிவை நோக்கி 40-க்கும் அதிகமான மொழிகள்: தமிழகத்திலும் 2 வட்டார மொழிகள் உள்ளன

நாட்டில் வட்டாரங்களில் பேசப்பட்டுவரும் 40-க்கும் மேற்பட்ட மொழிகள் அழிவை நோக்கி இருக்கின்றன என்று மத்திய புள்ளியியல் துறை தெரிவிக்கிறது. இந்த மொழிகள் குறிப்பிட்ட சில ஆயிரம் மக்களால் மட்டுமே பேசப்பட்டு வருகிறது

இது குறித்து மத்திய புள்ளியியல் துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

நாட்டில் மொத்தம் 22 பட்டியலிடப்பட்ட மொழிகளும், பட்டியலிடப்படாமல் 100 மொழிகளும் உள்ளன. இந்த 100-க்கும் மேற்பட்ட மொழிகளை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பேசி வருகின்றனர்.

இதில் 10 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் மட்டும் 42 மொழிகளைப் பேசி வருகின்றனர். இந்த மொழிகள்தான் அழிவின் தருவாயிலும், அழிவை நோக்கியும் இருக்கிறது. சமீபத்தில் யுனெஸ்கோ அமைப்பு, அழியும் தருவாயில் இருக்கும் 42 மொழிகளை பட்டியலிட்டு அறிவித்துள்ளது.

அதில் அந்தமான் நிகோபர் தீவுகளில் மக்களால் பேசப்பட்டுவரும் 11 மொழிகள் அழிவின் தருவாயில் இருக்கின்றன. குறிப்பாக கிரேட் அந்தமானீஸ், ஜார்வா, லமோங்கிஸ், லூரோ, மோட், ஓங்கே, பு, சனேன்யு, சென்டிலிஸ், சோம்பென், தகாகன்லிலாங் ஆகியசமூகத்தினர் பேசும் மொழிகள் அழிவை நோக்கி இருக்கின்றன.

ஓடிசா மாநிலத்தில் மண்டா, பர்ஜி, பெங்கோ மொழிகள், கர்நாட மாநிலத்தில் கொராகா, குருபா மொழிகள், ஆந்திர பிரதேசத்தில் கடபா, நைக்கி, தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களால் பேசப்பட்டுவரும் கோட்டா, தோடா மொழிகள் அழிவின் பிடியில் இருக்கின்றன. இவை சில ஆயிரம் மக்களால் மட்டுமே பேச்சு வழக்கில் இருந்துவருகிறது. எழுத்து வடிவம் இல்லை.

அருணாச்சலப்பிரதேசத்தில் மிரா, நா மொழிகள், அசாமில் தாய் நோரா, தாய் ராங், உத்தரகாண்டில் பங்கானி, ஜார்கண்டில் பிர்ஹோர், மஹாராஷ்டிராவில் நிஹாலி, மேகாலயாவில் ருகா மொழி, மேற்கு வங்காளத்தில் டோடோ மொழி ஆகியவை, அழிவின் அபாயத்தில் இருக்கின்றன.

மைசூரு நகரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மையம், 10 ஆயிரம் மக்களுக்கு குறைவாக பேசும் அழிவின் பிடியில் இருக்கும் இந்த மொழிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளையும், சிறப்புத் திட்டங்களையும் வகுத்துவருகிறது. இந்த மொழிகளை காக்க, எழுத்துவடிவில் கொண்டுவருதல், பாடல்களை சேகரித்தல், அகராதிகள் வெளியிடுதல் உள்ளிட்ட பலபணிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x