Last Updated : 18 Feb, 2018 02:34 PM

 

Published : 18 Feb 2018 02:34 PM
Last Updated : 18 Feb 2018 02:34 PM

உ.பி. இடைத்தேர்தல்: பாஜகவிற்கு எதிரான கூட்டணி இல்லை; மாயாவதி, அகிலேஷ், காங்கிரஸ் தனித்து போட்டி

உ.பி.யில் இரண்டு மக்களவை தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவிற்கு எதிரான கூட்டணி அமைக்கப்படவில்லை. இங்கு பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய மூன்றுமே தனித்து போட்டியிடுகின்றன.

உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத்தும் துணை முதல்வராக கேசவ் பிரசாத் மவுரியாவும் பதவியேற்றதை தொடர்ந்து அவர்கள் தங்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் காலியான கோரக்பூர், பூல்பூர் ஆகிய தொகுதிகளுக்கு மார்ச் 11-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களை அதன் தலைவர் மாயாவதி எந்நேரமும் அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அவரை விட முந்திய காங்கிரஸ் தனது இருதொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை நேற்று அறிவித்துள்ளது. கோரக்பூரில் டாக்டர்.சுர்ஜிதா சட்டர்ஜியும், பூல்பூருக்கு மணீஷ் மிஸ்ராவும் காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால், சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ்சிங் யாதவும் தன் வேட்பாளர்களை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் உ.பி.யில் 79 தொகுதிகளை பாஜக பெற்றது. காங்கிரஸ் 2-ம், சமாஜ்வாதி 5-ம் பெற்றன. மாயாவதி கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. அடுத்து வந்த சட்டப்பேரவை தேர்தலிலும்

பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணியில் சமாஜ்வாதி எதிர்க்கட்சி ஆனது. காங்கிரஸ் 4-வது இடம் பிடித்தது. கடந்தமுறை எதிர்கட்சியாக இருந்த மாயாவதி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இதனால் அம்மூன்று கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து போட்டியிடலாம் என கருத்து எழுந்தது. இதற்கு காங்கிரஸ், சமாஜ்வாதி தயாராக இருந்தன. இவ்விரு கட்சிகளும் உபி சட்டப்பேரவை தேர்தலில் இணைந்து போட்டியிட்டன. ஆனால், இதற்கு மாயாவதி தயங்கி வந்தார்.

தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினமா செய்திருந்த மாயாவதி பூல்பூரில் போட்டியிடப்போவதாக பேச்சு எழுந்தது. இதற்கும் மற்ற இரு கட்சிகளும் ஆதரவளிக்க தயாராக இருந்தன. இந்த வாய்ப்பையும் மாயாவதி பயன்படுத்திகொள்ள முன்வரவில்லை.

இது குறித்து ‘தி இந்து’விடம் பகுஜன் சமாஜ் நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறும்போது, “எதிர்கட்சியாக இருப்பினும் மற்றவர்களுடன் இணையாமல் தனி ஆவர்த்தனம் போடும் வழக்கம் கொண்டவர் எங்கள் பெஹன்ஜி. தற்போது மோடிக்கு எதிரான அலை தொடங்கியுள்ளது. பூல்பூரில் தலித்துகள் கணிசமாக இருப்பதால் தமக்கு வெற்றி கிடைக்கும் என்பது அவரது கணக்கு. இந்த வெற்றி மூலம் உ.பி.யில் நாங்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பிடிப்பதுடன் பாஜகவின் உண்மையான எதிர்க்கட்சி நாங்கள் தான் என நிரூபணமாகும்” என்று தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்த லாலுவிற்கு மாயாவதி சம்மதிக்கவில்லை. அடுத்து அப்பணியை செய்துவரும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பாவாருடனும் அவர் ஒத்துப் போகவில்லை. எனினும் இதற்குமுன் உ.பி.யில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மாயாவதி போட்டியிடாமல் விலகியிருந்தார்.

இதனால் மக்களவை இடைதேர்தலில் அவர் கூட்டு சேருவார் அல்லது விலகியிருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த மக்களவையின் இருதொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு அவர் வேட்பாளர்களை அறிவிக்க எடுத்த முடிவால் மூன்று கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடும் நிலை உருவாகி உபி அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் வாக்குகள் பிரிந்து பாஜக வெற்றி பெறும் நிலை உருவாகியுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவு மார்ச் 14-ல் வெளியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x