Last Updated : 16 Feb, 2018 07:01 AM

 

Published : 16 Feb 2018 07:01 AM
Last Updated : 16 Feb 2018 07:01 AM

தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி: காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு- தமிழகம், கர்நாடகாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்

கர்நாடகா, தமிழகம் இடையே நீண்ட காலமாக தொடரும் காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் கர்நாடகாவில் மைசூரு, மண்டியா, கிருஷ்ணராஜசாகர் அணை உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இது தொடர்பாக மெட்ராஸ் - மைசூரு மாகாணங்களுக்கு இடையே கடந்த 1892-ம் ஆண்டு முதல் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து 1924-ம் ஆண்டு மீண்டும் 50 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் காவிரி பிரச்சினை தொடர்ந்ததால் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை ஏற்படுத்தியது. காவிரி வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் 1991-ல் இடைக்கால தீர்ப்பு வழங்கிய நிலையில், 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில், கர்நாடகா, தமிழகத்துக்கு 10 மாத கால இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித் தது.

இதை எதிர்த்து தமிழகம், 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 72 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதே வேளையில் கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை 132 டிஎம்சியாக குறைத்து உத்தரவிடக்கோரி மேல்முறையீடு செய்தது. இதே போல கேரளாவும், புதுச்சேரியும் கூடுதல் நீரை திறந்துவிடக்கோரி மேல்முறையீடு செய்தன.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிராக தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் கடந்த 20 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,'' மாநிலங்களுக்கிடையே ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடக்கும் காவிரி வழக்கை, ஒரே மாதத்தில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்''என உத்தரவிட்டது.

சிறப்பு அமர்வு சுறுசுறுப்பு

இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் அமித்வ ராய், கான் வில்கர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வு காவிரி மேல்முறையீட்டு வழக்கை வாரத்தில் 3 நாட்கள் வீதம் நாள்தோறும் வேகமாக விசாரித்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, கர்நாடக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், மத்திய அரசின் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் உட்பட கேரளா, புதுச்சேரி அரசின் வழக்கறிஞர்களும் இறுதி வாதம் செய்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் உன்னிப்பாக கேட்ட சிறப்பு அமர்வு, “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காதது ஏன் என மத்திய அரசுக்கும், தமிழகத்துக்கு உரிய நீரை திறக்காதது ஏன் என கர்நாடக அரசுக்கும் கேள்வி எழுப்பினர். கடந்த செப்டம்பர் 20-ம் தேதி இவ்வழக்கில் அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் தங்களது இறுதி வாதத்தை நிறைவு செய்தனர்.

இதையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சிறப்பு அமர்வு, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. அடுத்த சில வாரங்களில் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுவை மற்றும் மத்திய நீர்வளத்துறை ஆகியவை எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு காவிரி வழக்கில் 4 மாநிலங்களும், மத்திய அரசும் முன் வைத்த இறுதி வாதம், எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த ஆவணங்கள், மாநிலங்களுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தங்கள், மாநிலங்களின் நீர் ஆதாரம், நீர் தேவை, வேளாண் முறை உள்ளிட்டவற்றை மூன்று நீதிபதிகளும் தீவிரமாக ஆராய்ந்து, தீர்ப்பு எழுதும் பணியை தொடங்கினர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான அமித்வ ராய் இம்மாத இறுதியுடன் ஓய்வு பெறுவதால், தீர்ப்பை வேகமாக வெளியிடுவதில் உறுதியாக இருந்தனர். இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “தலைமுறை தலைமுறையாக நீளும் காவிரி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். காவிரி மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் 4 வாரங்களில் தீர்ப்பளிக்கப்படும். அப்போது காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வரும்” என்றார்.

காவிரி வழக்கில் விசாரணை நிறைவடைந்து 150 நாட்கள் நெருங்கும் நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று, “ காவிரி நடுவர் ன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று காலை 10 மணிக்கு (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும்” என அறிவித்துள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியாவதால் கர்நாடகா - தமிழக விவசாயிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x