Published : 14 Feb 2018 07:31 PM
Last Updated : 14 Feb 2018 07:31 PM

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு சலுகைகள், மானியங்கள் ரத்தா?- உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்

மத்திய அரசின் குடும்பநலத் திட்டத்தின் விதிமுறைகளை மீறி இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டவர்களுக்கு அரசின் சலுகைகள் மானியங்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூக நல ஆர்வலர் அனுபம் பாஜ்வாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இன்று பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

''மத்திய அரசின் குடும்ப நலத் திட்டத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொண்டவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். அதேசமயம் விதிமுறைகளை மீறி இரு குழந்தைகளுக்கு அதிகமாக பெற்றுக் கொண்டவர்களுக்கு அரசின் சலுகைகளையும் மானியங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

நாட்டில் உள்ள குடிமகன்கள் அனைவரும் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள மட்டுமே அனுமதிக்க வேண்டும். அந்த விதிமுறைகளையும் குடும்ப நலத் திட்டத்தின் நெறியை மீறுபவர்கள் மீது அரசின் சலுகைளையும் மானியங்களையும் பெறுவதற்கு தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

இந்த நடவடிக்கையை எடுக்காவிட்டால் இப்போது உள்ள தலைமுறையினரின் எதிர்காலமும் எதிர்காலத் தலைமுறையினரின் எதிர்காலமும் கவலைக்கிடமாகும்.

ஆதலால் மத்திய அரசுக்கு அறிவுறுத்தி 2 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது என்ற விதிமுறையை நாட்டு மக்கள் கண்டிப்பாக பின்பற்ற உத்தரவிட வேண்டும்.

அதிகரித்து வரும் மக்கள் தொகை, இயற்கை வளங்களின் மீது மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும். இடப்பற்றாக்குறை மாசு அதிகரிப்பு வெப்பமயமாதல், குடிநீர் பற்றாக்குறை போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சி, மக்கள்தொகைப் பெருக்கம் சுற்றுச்சூழலின் தரத்தை குறைத்துவிடும். கட்டுப்படுத்த முடியாத நகர்மயமாதல், வேளாண்மை விரிவாக்கம், இயற்கை வாழிடங்கள் குறைதல் போன்ற சீர்கேடுகளை சந்திக்க நேரிடும்.

தொடர்ந்து இதே வேகத்தில் மக்கள் தொகை பெருகினால்  சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய கேட்டை உருவாக்கும்.''

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x