Last Updated : 14 Feb, 2018 02:34 PM

 

Published : 14 Feb 2018 02:34 PM
Last Updated : 14 Feb 2018 02:34 PM

பேராசிரியர் பணிக்கான யுஜிசியின் புதிய விதிமுறைகள்: முனைவர் பட்டத்துக்கு குறைந்த மதிப்பெண் அளிக்கப்பட்டதால் சர்ச்சை

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான புதிய விதிமுறைகளை மத்திய பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டு கருத்து கேட்டுள்ளது. இதில், இளநிலைப் பட்டத்தை விட முனைவர் பட்டத்திற்கு குறைந்த மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள சுமார் 40,000 கல்லூரிகள் மற்றும் 800 பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிக்கு அமர்த்தப்படுபவர்களுக்கும், ஏற்கெனவே பணியாற்றுபவர்களின் பதவி உயர்விற்கும் மதிப்பெண் முறையில் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. யுஜிசி விதிமுறைகளின்படி நடைபெற்று வரும் அந்த முறைகளில் 2018 நடப்பு ஆண்டிற்கான புதிய விதிமுறைகள் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதில், பி.ஏ, பி.எஸ்.சி, பிகாம் போன்ற இளநிலை பட்டப் படிப்பில் 80 சதவிகிதத்தை விட அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, நேர்முகத்தேர்வில் 21 மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது. 60 முதல் 79 சதவிகிதம் பெறுவோருக்கு 19-ம், 55 முதல் 59-க்கு 16 மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது. இதைவிட அதிகமாக முதுநிலைப் பட்டத்தில் 80 சதவிகிதத்திற்கு அதிகம் பெற்றவர்களுக்கு 33 மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 60 முதல் 79-க்கு 30, 55 முதல் 59-க்கு 25-ம் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த இரண்டையும் அடுத்து பயிலும் எம்.பில் பட்டத்தில் 60 சதவிகிதத்தை விட அதிகம் பெறுபவர்களுக்கு வெறும் 7 மதிப்பெண் அளித்துள்ளது. இந்த மூன்றையும் விட உயர்ந்த படிப்பான முனைவர் எனும் ஆய்வுப் பட்டத்திற்கு வெறும் 20 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு மத்திய அல்லது மாநில தகுதித்தேர்வில் வெற்றி பெறுவது கூடுதல் தகுதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த யுஜிசி மதிப்பெண்கள் கல்லூரி மற்றும் ஆசிரியர்கள் வட்டாரத்தில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து 'தி இந்து'விடம் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவரான பேராசிரியர் ராஜீவ் ரே கூறும்போது, ''இது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானதாக அமையும். அந்த மாணவர்களுக்கு சிறந்த கல்லூரிகளில் பயில வாய்ப்பு கிடைக்காமல் அதில் அதிக மதிப்பெண் பெற முடியாத நிலை உள்ளது. இவர்களால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியில் சேர முடியாது. ஏற்கெனவே இளநிலை, முதுநிலை முடித்து குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களையும் யுஜிசியின் புதிய விதிகள் பாதிக்கும்'' எனத் தெரிவித்தார்.

இதுவரையும் மத்திய பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் யுஜிசியின் குறைந்தபட்ச தகுதிகளுக்கு மேல் தம் தேவைக்கு ஏற்ற வகையில் நேர்முகத்தேர்வில் மதிப்பெண் அளித்து வருகின்றன. இதேபோல், மாநில அரசுகள் நிர்ணயம் செய்வதன்படி அதன் கீழ் உள்ள பல்கலைக்கழகங்கள் நேர்முகத்தேர்வில் அளித்து ஆசிரியர்களை நியமிக்கின்றன. தற்போது யூஜிசி வெளியிட்டுள்ள மதிப்பெண் முறைகள் நாட்டின் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஜூலை 2021 முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதன்மூலம், பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி முறையும் மெல்ல முடிவிற்கு வரும் அபாயம் தெரிகிறது.

தற்போதுள்ள யூஜிசி விதிகளின்படி பேராசிரியர் பணிக்கு மட்டும் முனைவர் பட்டம் அவசியம் என உள்ளது. இதை 2020 முதல் மாற்றி, உதவிப் பேராசிரியர்களின் பதவி உயர்விற்கு முனைவர் பட்டம் கட்டாயமாக்கவும் யூஜிசி திட்டமிட்டுள்ளது. இத்துடன் ஜூலை 21 முதல் உதவிப் பேராசிரியர்களாக அமர்த்தப்படுபவர்களுக்கும் முனைவர் பட்டம் கட்டாயமாகவும், தகுதித் தேர்வுகள் கூடுதல் தகுதியாகவும் அறிவிக்கப்பட உள்ளன. தனது புதிய விதிகளின் மீதான சுற்றறிக்கையில் கருத்துக்களையும் யூஜிசி கேட்டுள்ளது. இதன் பிறகு அது தன் இறுதி முடிவை அறிவிக்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x