Published : 14 Feb 2018 12:51 PM
Last Updated : 14 Feb 2018 12:51 PM

ஹஜ் மானியம்தான் ரத்து; ஜெருசலேத்துக்கு ஓ.கே: பாஜகவின் நாகலாந்து தேர்தல் வாக்குறுதி

முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட ஹஜ் புனிதப் பயணத்துக்கான மானியத்தை ரத்து செய்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், நாகாலாந்தில் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களுக்கு வாக்களித்தால், ஜெருசலேத்துக்கு இலசமாக அனுப்புகிறோம் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

நாகாலாந்து மாநிலத்தில் வரும் 27-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. நாகாலாந்து மாநிலத்தில் தேசிய ஜனநாயக முன்னனி கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலைச் சந்திக்கிறது.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் 88 சதவீத மக்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள், அதேபோல, மேகாலயா மாநிலத்தில் 75 சதவீதம் கிறிஸ்தவர்கள் வாழ்க்கின்றனர். இவர்களின் வாக்குகளைக் கவரும் வகையில் பாஜக தேர்தலில் வாக்குறுதி அளித்துள்ளது.

பாஜகவின் வாக்குறுதி நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கிறிஸ்தவ மக்களுக்கானதா? அல்லது வடகிழக்கு மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கானதா?, அல்லது நாகாலாந்து மாநிலத்தில் வசிக்கும் கிறிஸ்தவ மக்களுக்கானதா? என்பது தெரியவில்லை.

இது குறித்து நாகாலாந்து பாஜக செய்தித்தொடர்பாளர் ஜேம்ஸ் விஜோ கூறுகையில், “ நாகாலாந்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மூத்த குடிமக்களை ஏசுவின் பிறந்த இடமான ஜெருசலேத்துக்கு இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டம் வைத்து இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

அதேசமயம், காங்கிரஸ் கட்சி, அளித்த தேர்தல் வாக்குறுதியில், நாகாலாந்தில் ஆட்சிக்கு வந்தால், கிறிஸ்தவர்கள் ஜெருசலேத்துக்கு புனிதப்பயணம் மேற்கொள்ள மானியம் அளிப்போம் எனத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி கூறுகையில், “ பாஜகவை பொருத்தவரை, தங்களுக்கு தேர்தல் ஆதாயம் இருந்தால், அவர்கள் எதையும் செய்வார்கள். கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேத்துக்கு இலவசமாக அழைத்துச் செல்வார்கள்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே முஸ்லிம்களுக்கான ஹஜ் புனிதப்பயணத்துக்கான மானியத்தை ரத்து செய்து கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. அப்போது பேசிய மத்திய அமைச்சர் முகமது அப்பாஸ் நக்வி “ சிறுபான்மை சமூகத்தினருக்கு அதிகாரம் அளித்து, மரியாதையுடன் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. அவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையை விரும்பவில்லை. வளர்ச்சியையும், மரியாதையையும் அளிக்க விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

சிறுபான்மையினர்களை மரியாதையாக நடத்த விரும்புகிறோம் எனக் கூறி முஸ்லிம்களுக்கு ஹஜ் மானியத்தை ரத்து செய்த மத்திய அரசு, சிறுபான்மையாளர்களாக இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேத்துக்கு இலவசமாக அழைத்துச் செல்வோம் எனக் கூறியுள்ளது முரணாக உள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x