Published : 14 Feb 2018 10:59 AM
Last Updated : 14 Feb 2018 10:59 AM

பணமதிப்பு நீக்கம் குறித்து பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்கியது ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர்: ராகுல் காந்தி சாடல்

 

பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்கியது ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் ஒருவர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு முதல்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். கல்புர்கி நகரில் தொழில்துறையினரை சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடையே அவர் பேசியதாவது:

‘‘மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் ஆர்எஸ்எஸ் இயக்கமே முற்றிலமாக வழி நடத்துகிறது. பல்வேறு அமைச்சர்களின் செயல்பாடுகள், துறைகளின் திட்டங்கள், கொள்கை முடிவுகள் என அனைத்துமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு அமைச்சகத்திற்கும், ஆர்எஸ்எஸ்ஸில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட்டு, அதன் பணிகளை ஒருங்கிணைக்கிறார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை பேரழிவு பாதைக்கு கொண்டு சென்று விட்டது. இந்த யோசனை பிரதமருக்கு எங்கிருந்து வந்தது என தெரியுமா? ரிசர்வ் வங்கியில் இருந்தா? நிதியமைச்சகத்திடம் இருந்தா? நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் இருந்தா? இந்த ஆலோசனையை பிதமருக்கு கூறியவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிந்தனையாளர் ஒருவர். ஆர்எஸ்எஸ் இயக்கமே இந்த யோசனையை பிரதமர் மோடிக்கு வழங்கியது. பிரதமர் இதனை செயல்படுத்தினார்.

பிரதமர் மோடியின் ஆட்சிமுறை என்பது அரசு நிறுவனத்தை கைபற்றி தங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவது தான். மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனத்தை தங்களுக்காக பயன்படுத்திக் கொள்வது அவர்களது வழக்கம். ஆனால் அரசியல் கட்சிகளின் பணி என்பது அரசியலுடன் முடிந்து விடுகிறது. அரசு நிறுவனங்களை கைபற்றி தங்கள் இஷ்டம் போல் ஆட்டி வைப்பது அல்ல.

இந்த நாட்டின் அரசு நிறுவனங்களை மக்களுடையதாகவே காங்கிரஸ் கருதுகிறது. அவை மக்களுக்கானவை, ஜனநாயகத்தில் மக்கள் பணியாற்றவே அவை உருவாக்கப்பட்டுள்ளன. அரசு நிறுவனங்களை இயக்குவது அதிகாரிகளாக இருக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் மக்கள் பணியாற்ற வேண்டும்’’ எனக்கூறினார்.

முன்னதாக, மூன்று நாட்களுக்கு ராணுவத்தை உருவாக்கும் திறன் படைத்தது ஆர்எஸ்எஸ் என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் கூறியிருந்தார். இது ராணுவத்தை அவமானப்படுத்தும் செயல், இதற்காக மோகன் பகவத் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் ஆர்எஸ்எஸ் மீது அவர் மீண்டும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x