Last Updated : 14 Feb, 2018 07:38 AM

 

Published : 14 Feb 2018 07:38 AM
Last Updated : 14 Feb 2018 07:38 AM

இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் அனைத்து பிரிவுகளின் அதிகாரம் பெற்றது அல்ல: மவுலானா சையது சல்மான் பேட்டி

அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம், அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் அதிகாரம் பெற்ற அமைப்பு அல்ல என மவுலானா சையது சல்மான் ஹுசைனி நத்வி தெரிவித்துள்ளார். முஸ்லிம் தனிச்சட்ட வாரிய நிர்வாகக்குழுவில் இருந்து நீக்கப்பட்ட நத்வி, ‘தி இந்து’வுக்கு அளித்த விரிவான பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை நீங்கள் சந்தித்த பின்னணியை விளக்க முடியுமா?

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடனான எனது நட்பு மிகவும் பழமையானது. அவர் பாபர் மசூதி விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்த லக்னோ வந்திருந்தார். அப்போது என்னால் அவரை சந்திக்க முடியவில்லை. சங்கராச்சாரியார் இது தொடர்பான முயற்சியில் ஏற்கெனவே ஈடுபட்டார். அப்போது அவருடன் மவுலானா அசரத் அலி இணைந்து செயல்பட்டார். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் ரவிசங்கரை பெங்களூரூவில் சந்தித்துப் பேசினேன்.

உங்கள் கருத்துப்படி மசூதியை இடமாற்றம் செய்ய ஹம்பிலி சிந்தனை பிரிவில் மட்டும் அனுமதி இருப்பதாகவும் மீதம் உள்ள ஷாஃபி, ஹனபி மற்றும் மாலிகீ ஆகியவற்றில் அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறதே?

நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், நான்கு சிந்தனை பிரிவுகளின் கொள்கைளும் ஷரீயத்தின் கீழ் இருப்பதால் அவை இஸ்லாத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. எந்தப் பிரிவில் இருப்பினும் நல்ல விஷயத்தை ஆராய்ந்து ஏற்க வேண்டும். இதை நம் உலமாக்கள் பல்லாண்டுகளாக செய்து வருகின்றனர். இன்றைய நிலையில் அங்கு மசூதி இல்லை. இதை நாம் அங்கு கட்ட விரும்புகிறோம். ஆனால் அங்குள்ள கோயில் மீது அவர்கள் தான் கட்டிடம் கட்டுவார்கள். அதில் நாம் மசூதியை கட்ட முடியாது. இதற்கு அனுமதி அளித்து இரு தரப்பிலும் சுமுக உறவையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்துவது நல்ல விஷயம் அல்லவா!

அயோத்தியில் இப்போது இருப்பது தற்காலிக கோயில் என்றுதானே குறிப்பிடப்படுகிறது?

பாபர் மசூதிக்குள் 1941-ல் சிலை வைக்கப்பட்ட பிறகு தொழுகை நடத்துவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அல்லாவின் பெயர் உச்சரிக்கப்படாததால் இஸ்லாம் முறை அற்ற இடமாகி விட்டது. இந்நிலையில் ‘அங்கு மீண்டும் மசூதி கட்டுவோம்’ எனக் கூறுவது சரியல்ல. இந்தப் பிரச்சினையில் ஏற்கெனவே பல உயிர்கள் ரத்தம் சிந்தியாகி விட்டது. அந்த இடத்தை மூன்று தரப்பினர் பங்கிட்டுக்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை உச்ச நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

முஸ்லிம் தனிச்சட்ட நிர்வாகக்குழுவில் இருந்து நீக்கியது குறித்து உங்கள் கருத்து?

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து நான் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ஹைதராபாத்தில் தொடங்கிய முஸ்லிம் தனிச்சட்ட வாரிய கூட்டத்தின் முதல் நாளிலேயே எனது பதவியை ராஜினாமா செய்து விட்டேன். ஆனால் இரு தினங்கள் கழித்து அவர்கள் என்னை நீக்கியதில் எந்த அர்த்தமும் இல்லை. ரவிசங்கருடன் இணைந்து சமரச பணியை செய்ய எனது பதவியை ராஜினாமா செய்தேன். அப்பணியைத் தொடருவேன்.

ரவிசங்கரின் சமரச பேச்சுவார்த்தைக்கு அனைத்து இந்துக்கள் மற்றும் மத்திய அரசு தரப்பில் ஆதரவு உள்ளதா?

இப்போதுதான் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. இதற்காக நாமும் அயோத்தி சென்று மனுதாரர்களான இந்து மகாசபை, நிர்மோஹி அகாரா ஆகியோரிடம் பேசுவோம், பிறகு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவரையும் சந்தித்துப் பேசுவோம்.

உங்களை நீக்கியதால் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் மீது ஏற்படும் தாக்கம் என்ன?

இந்த வாரியம், இந்தியாவில் வசிக்கும் அனைத்து முஸ்லிம் பிரிவுகளின் அதிகாரம் பெற்ற ஒட்டுமொத்த தலைமை அமைப்பு அல்ல. முஸ்லிம்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பரேல்வி கொள்கை பிரிவினர். மீதியில் ஷியா பிரிவு, நத்வீ மதரசா பிரிவு உள்ளது. பெண்கள் தனியாக ஒரு வாரியம் அமைத்துள்ளனர். இவ்வாறு தனித்தனியாக உள்ள அமைப்புகள் அனைத்தும் தங்கள் கடமைகளை செவ்வனே செய்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x