Published : 13 Feb 2018 07:54 PM
Last Updated : 13 Feb 2018 07:54 PM

பணம் வங்கியிலேயே பாதுகாப்பாக இல்லாதபோது பக்கோடா எப்படி சாப்பிடுவது?- மோடியை விளாசிய மம்தா பானர்ஜி

வங்கியில் பணம் பாதுகாப்பாக இல்லாதபோது, எப்படி பக்கோடா சாப்பிடுவது? என்து பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மத்திய அரசு கொண்டு வர உள்ள நிதி தீர்வு மற்றும் வைப்புத் தொகை காப்பீட்டுக்கு எதிராகவே மம்தா பானர்ஜி கடுமையாகப் பேசியுள்ளார்.

மேற்கு வங்காள மாநிலம், நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் இன்று நடந்த கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மத்திய அரசு நிதித்தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீடு எனும் மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. இந்த மசோதா சட்டமானால், மக்கள் வங்கியில் செலுத்திய பணத்துக்கு பாதுகாப்பு இருக்காது. மக்களின் பணத்தை மத்திய அரசு கொள்ளையடிக்க முயன்றால், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். வங்கியில் இருக்கும் எங்களின் பணம் பாதுகாப்பாக இல்லை. வங்கியில் பணம் பாதுகாப்பாக இல்லாத போது, பக்கோடா எப்படி சாப்பிடமுடியும்?.

மாநிலத்தில் அடுத்து நடக்க இருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவினர் சாதி, மத மோதல்களை தூண்டிவிடுவார்கள். மக்கள் மடிந்தாலும், வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டாலும், அவர்கள் கவலைப்படமாட்டார்கள். பாஜக சொல்வதைக் கேட்காதீர்கள்.

நாம் இந்துக்களாக இருந்தாலும், அனைத்து மதங்களும் சமமான முக்கியத்துவம், அளித்து மதிக்கிறோம். ஆதலால், பாஜகவிடம் இருந்து இந்துத்துவத்தை கற்றுக்கொள்ள தேவையில்லை. இந்துக்கடவுள்களை தூக்கி சாலையில் எறிந்து இந்துக்களை பாஜகவினர் புண்படுத்துகிறார்கள். அதனுடன் அரசியல் விளையாட்டு நடத்துகிறார்கள்.

மேற்கு வங்கத்தில் நாங்கள் எப்படி அரசு நடத்துகிறோம் என்பதை பார்த்து மத்திய அரசு எங்களிடம் இருந்து கற்க வேண்டும். 1300 கி.மீ தொலைவுக்கு கிராமத்தில் சாலைகள் அமைத்துள்ளோம். 25 லட்சம் வீடுகளை ஏழைகளுக்கு கட்டிக்கொடுத்துளோம்.

இலவச சுகாதாரத் திட்டத்தையும், ரூ.20க்கு அரசியை கொள்முதல் செய்து கிலோ 2ரூபாய்க்கு மக்களுக்கு கொடுக்கிறோம். எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 57 லட்சம் சான்றிதழ்களை வழங்கி இருக்கிறோம். அகதிகளுக்கும் 13 ஆயிரம் நிலப்பட்டாக்கள் வழங்கி இருக்கிறோம். இதுபோன்ற அரசை நாட்டில் எங்கும் பார்த்து இருக்க முடியாது.

ஆண்டுக்கு 6 லட்சம் பெண் குழந்தைகள் பயன் பெறும் வகையில் ரூபா ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் ஒவ்வொருவரும் ரூ. 25 ஆயிரம் பெறலாம்.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x