Last Updated : 13 Feb, 2018 05:23 PM

 

Published : 13 Feb 2018 05:23 PM
Last Updated : 13 Feb 2018 05:23 PM

ஹரியாணாவில் பசு மாடுகளை பராமரிக்காத உரிமையாளர்களுக்கு ரூ.5,100 அபராதம்

ஹரியாணா மாநிலத்தில் பசு மாடுகளை பராமரிக்காமல், அவற்றை சாலையில் அனாதைகளாக அலைய விடும் உரிமையாளர்களுக்கு ரூ. 5,100 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக மனோகர் லால் கட்டார் செயல்பட்டு வருகிறார். அங்கு ஏற்கனவே பசுக்களை கொல்வதற்கு எதிராக தடைச்சட்டமும், கடும் அபராதமும் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில், பசுக்களை அனாதையாக்கும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இது குறித்து ஹரியானா பசு சேவா அமைப்பின் தலைவர் பானி ராம் மங்களா சண்டிகரிர் நிருபர்களிடம் கூறுகையில், “ பசுக்களை முறையாக பராமரிக்காமல் சாலையில் அலையவிடும் உரிமையாளர்களுக்கு ரூ.5,100 அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு அலையும் பசுக்களை கண்டுபிடித்து பசு காப்பகத்தில் சேர்க்க பிரத்யேகமாக செயலியும் உருவாக்கப்படும்.

சாலையில் அலையும் பசுக்கள் குறித்து தகவல் அளிக்க பிரத்யேகமாக ஒரு செயலியை தயாரிக்கவும் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த செயலியில் பசு மாடு எங்கு இருக்கிறது, இடம் உள்ளிட்டவற்றை கூறினால், அருகில் உள்ள பசு காப்பகத்திடம் அந்த பசுவை ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

இதுதவிர பசுவின் சாணம், சிறுநீர் ஆகியவற்றில் இருந்து பல்வேறு பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்துபவர்களுக்கு 90 சதவீதம் கடன் மானியம் அளிக்கப்படும்.

மேலும், மாநிலத்தில் பசு காப்பகம் அமைக்க விரும்புவர்களுக்கு அரசு நிதி உதவியும் அளிக்கும். பசு காப்பகத்தில் தீவனங்கள் வெட்டும் எந்திரம் வாங்கவும் நிதி உதவி அளிக்கப்படும் “ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x