Published : 13 Feb 2018 10:25 AM
Last Updated : 13 Feb 2018 10:25 AM

பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு; ஏழை முதல்வர் மாணிக் சர்க்கார்: ஆய்வில் தகவல்

 

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிக சொத்துகள் கொண்ட முதல்வராக முதலிடத்தில் உள்ளார். அதேசமயம் சொத்துப் பட்டியலில் கடைசி இடத்தில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் இருக்கிறார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஆய்வு செய்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு, பல்வேறு மாநில முதல்வர்களின் பின்னணி குறித்து ஆய்வு நடத்தியுள்ளது.

இதன்படி, நாட்டிலேயே அதிக சொத்து மதிப்புள்ள மாநில முதல்வர்களின் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளார். அவரது சொத்து மதிப்பு 177 கோடி ரூபாயாகும். அதேசமயம் சொத்து மதிப்பு பட்டியலில் மிக குறைவாக உள்ள மாநில முதல்வராக, திரிபுராவைச் சேர்ந்த மாணிக் சர்க்கார் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 26 லட்சம் ரூபாயாகும்.

அதிக சொத்து மதிப்பு கொண்ட முதல்வர்களில் சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு 129 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பஞ்சாபை சேர்ந்த காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங் 48 கோடி ரூபாய் சொத்துகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

குறைவான சொத்துகள்

இதுபோலவே குறைவான சொத்துகள் கொண்டவர்களில் மாணிக் சர்க்காருக்கு அடுத்தபடியாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 30 லட்சம் ரூபாய் சொத்துகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி 55 லட்சம் ரூபாய் சொத்துகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதுபோலேவே மொத்தமுள்ள 31 முதல்வர்களில் 11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மொத்தத்தில் 26 சதவீத முதல்வர்கள் மீது கொலை, மோசடி உள்ளிட்ட மிக கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கல்வியறிவைப் பொருத்தவரை 10 சதவீத முதல்வர்கள் 12-ம் வகுப்பு படித்துள்ளனர். 39 சதவீதம் பேர் பட்டதாரிகளாகவும், 32 சதவீதம் பேர் இன்ஜினியரிங் உள்ளிட்ட புரபஷனல் கல்வி பெற்ற பட்டதாரிகளாக உள்ளனர். 16 சதவீதம் பேர் முதுநிலை பட்டதாரிகளாகவும், 3 சதவீதம் பேர் பிஎச்டி முடித்தவர்களாக உள்ளனர்.

இவ்வாறு ஏடிஆர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x