Last Updated : 12 Feb, 2018 04:55 PM

 

Published : 12 Feb 2018 04:55 PM
Last Updated : 12 Feb 2018 04:55 PM

பாஜக ஆட்சி அமையப் போகும் 20-வது மாநிலம் திரிபுரா: அமித் ஷா நம்பிக்கை

பாஜக ஆட்சி அமையப் போகும் 20-வது மாநிலமாக திரிபுரா இருக்கும் என்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

திரிபுராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் 6  நாட்களே உள்ளன. இந்நிலையில் அங்கு பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

சிபிஐ (எம்) ஆட்சி நடந்துவரும் திரிபுராவில் எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று பாஜக கடும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. அவ்வகையில் அருண் ஜேட்லி, அமித் ஷா போன்ற பாஜக தலைவர்கள் அங்கு களமிறக்கப்பட்டுள்ளனர்.

அங்கு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசியவதாவது:

''பல்வேறு தொகுதிகளை பார்வையிட்ட பிறகு சூழ்நிலைகள் மற்றும் பிரச்சாரங்களை நான் பார்த்து வருகிறேன். திரிபுராவில் அடுத்த அரசு பாஜக அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவாறு வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்காளர்களுக்கு உறுதியளித்தார். அது பாஜக ஆட்சி அமையும் 20-வது மாநிலமாக இருக்கும்.

இக்கட்சி மணிப்பூரிலோ அஸாமிலோ எம்எல்ஏக்களைப் பெற்று வலுவான அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் பாஜக திட்டங்களின் அபரிதமான செல்வாக்குதான் இரு வடகிழக்கு மாநிலங்களுக்கும் கட்சியை அதிகாரத்தில் கொண்டுவந்தது. அதைப்போன்ற ஒரு நிலையில்தான், திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக இடது முன்னணி திரிபுரா மாநில அரசை ஆட்சி செய்கிறது. ஆனால் திரிபுராவில் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம், சுகாதார சேவைகள், மின்சாரம், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகளை ஈர்த்தல் போன்றவற்றில் மிகவும் பின்தங்கியுள்ளது. ஒருவகையில் சிபிஐ (எம்) இடதுசாரி முன்னணி 1993-ல் இருந்து வடகிழக்கு மாநிலத்தில் அதிகாரத்தில் உள்ளது. 1978 மற்றும் 1988 க்கு இடையிலும்கூட இடதுசாரி அதிகாரமும் இருந்தது.

பத்து ஆண்டுகள் மற்றும் 25 ஆண்டுகள் என்பவை மாநில வளர்ச்சிக்கு மிகவும் நீண்டகாலம் ஆகும். ஆனால் இன்னமும் திரிபுரா பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. பாஜக ஆட்சியில் உள்ள பல மாநிலங்கள் குறைவான காலத்தில் அதிக வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பாஜக அடுத்த அரசாங்கத்தை அமைக்கும்போதே நிச்சயம் வளர்ச்சி வரும்,

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டிலேயே திரிபுராவில்தான் அதிகமாக உள்ளது. கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை ஆகியவை இங்கு தினசரி நிகழ்வாக இருக்கிறது. சிபிஐ (எம்) ஊழியர்கள் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளை மிரட்டி வருகின்றனர். அதனாலேயே இங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது

ஆனால் பாஜகவின் எழுச்சியைப் பார்த்த பிறகு, அவர்கள் விரக்தியடைந்து, பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு எதிராக வன்முறையை ஏவி விட்டுள்ளனர். பாஜக தொண்டர்கள் மாநிலத்தில் எங்கும் சிபிஐ (எம்)மின் வன்முறையை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளனர். இன்னொரு பக்கம் சிபிஐ (எம்) ஆதரவைப் பெறுவதற்காக மாநிலத்தில் இடதுசாரி விரோத வாக்குகளை பிளவுபடுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி முயன்றுவருகிறது. ஆனால் அது நடக்காது''.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

குஜராத் மாநிலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், பாஜக ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் இளைஞர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என்றும் மத்திய நிதி மந்திரி அருண் ஜேட்லி நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது அறிவித்தார்.

வரும் பிப்ரவரி 18-ல் நடைபெற உள்ள தேர்தலில் 60 உறுப்பினர்களை கொண்ட திரிபுராவில் பாஜக 51 இடங்களில் போட்டியிடுகிறது, அதே நேரத்தில் அதன் கூட்டணியான சுதேசிய மக்கள் முன்னணி திரிபுரா (ஐபிஎஃப்டி) 9 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x