Last Updated : 11 Feb, 2018 02:32 PM

 

Published : 11 Feb 2018 02:32 PM
Last Updated : 11 Feb 2018 02:32 PM

சஞ்சுவான் ராணுவ முகாம் தாக்குதல்: ராணுவம் பதிலடி; 4 தீவீரவாதிகள் சுட்டுக் கொலை

 

காஷ்மீரின் சஞ்சுவான் ராணுவ முகாமுக்குள் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ராணுவம் அளித்த பதிலடியில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

ஜம்மு நகரின் புறநகர் பகுதியில் சஞ்சுவான் ராணுவ முகாம் உள்ளது. இந்த ராணுவ முகாமுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த ஜெய்ஸ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளநிலை ராணுவ அதிகாரி உள்பட, 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஏறக்குறைய நேற்றில் இருந்து ராணுவத்தினர் முகாமை சல்லடையாக தேடி வந்தனர். ராணுவ முகாமுக்குள் இருக்கும் குடியிருப்புகளில் தங்கி இருக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை பத்திரமாக வெளியேற்றினர்.

அப்போது, முகாமுக்குள் பதுங்கிய தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் கடுமையாக துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் நேற்று மாலையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இன்று அதிகாலையில் ராணுவத்தினருடன் தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

அதேசமயம், இரு தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து ராணுவ முகாமின் மக்கள் தொடர்பு அதிகாரியும் லெப்டினென்ட் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், ''தீவிரவாதிகளுடன் தொடர்ந்து ராணுவத்தினர் சண்டையிட்டு வருகின்றனர். முகாமில் தங்கி இருக்கும் 150 ராணுவத்தினர் குடும்பமும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தையடுத்து, முகாம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முகாமின் பின்பக்கம், முகப்புப் பகுதியில் ராணுவத்தினரின் குண்டு துளைக்காத வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஜம்மு-லக்கன்பூர் புறவழிச்சாலையில் இந்த ராணுவ முகாம் அமைந்து இருக்கிறது. ஆனாலும், மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் ராணுவத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

முகாமைச் சுற்றி சிஆர்பிஎப் படையினரும், போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 9-ம்தேதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நினைவுதினம் வருவதால், ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்கெனவே புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x