Last Updated : 08 Feb, 2018 03:29 PM

 

Published : 08 Feb 2018 03:29 PM
Last Updated : 08 Feb 2018 03:29 PM

2017ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 1.46 லட்சம் பேர் பலி: மத்திய அரசு தகவல்

கடந்த 2017ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 4.60 லட்சம் சாலை விபத்துக்கள் நடந்துள்ளன, அதில் 1.46 லட்சம் மக்கள் பலியாகி உள்ளனர் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்து பேசியதாவது-

கடந்த 2017ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 4.60 லட்சம் சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. அதில் 1.46 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள்.

கடந்த 2016ம் ஆண்டில் 4.80 லட்சம் விபத்துக்கள் நாடுமுழுவதும் நடந்தன. அதில் 1.50 லட்சம் மக்கள் பலியானார்கள். 2015ம் ஆண்டில் 5.01 லட்சம் விபத்துக்கள் நடந்தன. அதில் 1.46 லட்சம் வாகன ஓட்டிகள் பலியானார்கள்.

சாலை விபத்துக்களில் பலியானவர்களின் சராசரி வயதைக் கணக்கிட்டால், 18 வயதில் இருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். இந்த வயதில் உள்ளவர்கள் மட்டும் 68.6 சதவீதம் அதாவது ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 409 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இந்த விபத்துக்களில் பலியானர்கள் பெரும்பாலும் இரு சக்கர வாகனத்தில் வந்து விபத்துக்களில் சிக்கியவர்கள். இவர்கள் அனைவரும் தலை கவசம் அணிந்திராத காரணத்தால் பலியானார்கள் என அறிக்கையில் தெரிவந்துள்ளது.

சாலை விபத்துக்களைத் தடுக்க சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தேசிய சாலை பாதுகாப்பு கொள்கையையும் கொண்டு வந்துள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து துறை எடுத்துவரும் நடவடிக்கையில் சாலைவிதிகள் குறித்த விழிப்புணர்வு உண்டாக்குதல், சாலை பாதுகாப்பு குறித்த தகவல்தளத்தை உருவாக்குதல், பாதுகாப்பான சாலையை கட்டமைத்தல், சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துதல் உள்ளிட்டவற்றை செய்து வருகிறோம்.

சாலை பாதுகாப்பு குறித்த கொள்கை முடிவுகளை மத்திய அரசு உருவாக்கிய தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்கிறது.

அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் சாலை பாதுகாப்பு கவுன்சில்களையும், மாவட்டம் தோறும் சாலை பாதுகாப்பு கமிட்டியையும் உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

இவ்வாறு அவர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x