Published : 08 Feb 2018 07:05 AM
Last Updated : 08 Feb 2018 07:05 AM

தகுந்த சூழ்நிலைகளில் உயர் நீதிமன்ற வாதங்களில் உள்ளூர் மொழியை பயன்படுத்தலாம்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கருத்து

உள்ளூர் மொழிகளை உயர் நீதிமன்றங்களில் நடைபெறும் வாதத்தில் தகுந்த சூழ்நிலைகளில் பயன்படுத்தலாம் என்று குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு கூறினார்.

மாநிலங்களவையில் நேற்று நடந்த நேரமில்லா நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுந்து பேசியதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வாதாடுவதற்கு பயன்படுத்த உத்தரவிடவேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மான விவரம் மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

அந்த தீர்மானத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து வெங்கய்ய நாயுடு பேசியதாவது: தகுந்த சூழ்நிலைகளில் உயர் நீதிமன்ற வாதங்களில் உள்ளூர் மொழியைப் பயன்படுத்தலாம். இந்த வழியில் பயணித்தால் அது சிறந்ததாக இருக்கும். இந்த விஷயத்தில் அனைவரிடையேயும் கருத்தொற்றுமை வேண்டும். அனைவரும் இதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றார்.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ரஞ்சனி பாட்டீல் கோரிக்கை விடுத்தார். இதற்கு வெங்கய்ய நாயுடு கூறியதாவது: ரஞ்சனி பாட்டீல் எழுப்பிய கோரிக்கை நல்ல கோரிக்கையாகும். இது ஒட்டுமொத்த தேசத்துக்கு எதிராக எழுந்த சவாலாக உள்ளது. இந்த விஷயத்தில் நாங்கள் உறுதிமொழி கொடுத்துள்ளோம். அதை விரைவில் நிறைவேற்றுவோம் என்றார்.

தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை வழக்கறிஞர்கள் நீண்ட ஆண்டுகளாக வைத்து வருகின்றனர். இதையடுத்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் என்று கூறி பேரவையில் தீர்மானம் இயற்றியது. அதை மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்தது. ஆனால் அந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது நினைவிருக்கலாம். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x