Last Updated : 06 Feb, 2018 03:01 PM

 

Published : 06 Feb 2018 03:01 PM
Last Updated : 06 Feb 2018 03:01 PM

நாங்கள் ஒன்றும் குப்பை பொறுக்குபவர்கள் அல்ல- மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

 திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக முழுமையான தகவல்கள் இல்லாத 845 பக்க பிரமாண பத்திரத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'நாங்கள் ஒன்றும் குப்பை பொறுக்குபவர்கள் அல்ல' என்று மத்திய அரசை கடுமையாக சாடினர்.

கடந்த 2015-ம் ஆண்டு டெல்லியில் 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான். இவனுக்கு சிகிச்சை அளிக்க டெல்லியில் 5 பெரிய மருத்துவமனைகள் மறுத்துவிட்டதாகக் கூறி, சிறுவனின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்த உச்ச நீதிமன்றம்,திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாக பின்பற்றாததால், சிக்குன் குன்யா, டெங்கு காய்ச்சல் போன்றவை ஏற்படுகின்றன என்று வருத்தம் தெரிவித்தது.

ஆதலால், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுடன், யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை நடத்தி, மாநில அளவில் ஆலோசனை வாரியம் நியமிப்பது தொடர்பாக பிரமாணப் பத்திரத்தை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி உத்தரவிட்டு இருந்தது.

மேலும், அந்த ஆலோசனை வாரியத்தில் எத்தனை உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள், மாநில வாரியாக அவர்களின் பெயர் ஆகிய அடங்கிய பட்டியலையும் கேட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் 845 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவிக்கையில், 22 மாநிலங்களில் இருந்து தான் அறிக்கையும், ஆலோசனை வாரியம் அமைப்பது தொடர்பான அறிக்கையும் கிடைத்துள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து இன்னும் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தனர்.

இதைக் கேட்ட நீதிபதிகள் கடுமையாக கோபப்பட்டு, வருத்தம் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், “ எந்த முழுமையான விவரங்களும் இல்லாத இந்த அறிக்கையை நாங்கள் எப்படி பிரமாணப் பத்திரமாக ஏற்க முடியும். இதை நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆவணமாக ஏற்க முடியாது. இதை நீங்கள் படிக்கவில்லையா?. எங்களை இந்த அறிக்கையை படிக்கக்கூறுகிறீர்களா?.

இந்த நீதிமன்றத்துக்கு மத்திய அரசு என்ன கூற விரும்புகிறது? எங்கள் மனதில் இடம்பிடிக்க, ஈர்ப்பதற்கு ஏதேனும் செய்ய அரசு முயல்கிறதா? நாங்கள் அப்படி எல்லாம் மயங்கிவிடமாட்டோம்.

நீங்கள் குப்பைகளை கொண்டுவந்து எங்களிடம் கொட்டுகிறீர்கள்?. நாங்கள் ஒன்றும் குப்பை பொறுக்குபவர்கள் இல்லை. இந்த பிரமாணப் பத்திரத்தை ஏற்க முடியாது

இவ்வாறு நீதிபதிகள் கடுமையாக பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x