Last Updated : 31 Jan, 2018 01:09 PM

 

Published : 31 Jan 2018 01:09 PM
Last Updated : 31 Jan 2018 01:09 PM

மார்ச் மாதத்துக்குள் 75 லட்சம் வேலைவாய்ப்புகளா?- ப.சிதம்பரம் விமர்சனம்

 

நாட்டில் மார்ச் மாதத்துக்குள் 75 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது சாத்தியமில்லாதது என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் நாளேடுகளில் எழுதிய கட்டுரைகளை தொகுத்து 'ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். இந்த நூல் வெளியிட்டு விழா டெல்லியில் நேற்று நடந்தது. அதில் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், துணை குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்ட பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசியதாவது :

''மத்திய அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில் மார்ச் மாதத்துக்குள் 75 லட்சம் வேலைவாய்ப்புகளை நாட்டில் உருவாக்கப் போகிறோம் எனத் தெரிவித்துள்ளது. இதைக் கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது, இந்தியாவில் இது சாத்தியமே இல்லை.

அமைப்பு சார்ந்த துறைகளில் 75 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால், அதே அளவுக்கு வேளாண் துறைகளிலும், அமைப்பு சாரா துறைகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஆனால், இப்போதுள்ள நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வைத்து, 5 மடங்கு அதிகரித்து, ஓரு கோடியே 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது சாத்தியமே இல்லை.

கடந்த கால புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2014-15ம் ஆண்டு பிஎப் எண்ணிக்கை 23 லட்சம் உயர்ந்துள்ளது. அப்போது பொருளாதாரம் 7.3 சதவீதம் வளர்ச்சி பெற்றது. 2015-16ம் ஆண்டு பிஎப் எண்ணிக்கை 25 லட்சமாக அதிகரித்தது அப்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக உயர்ந்தது. 2016-17ம் ஆண்டு 75 லட்சமாக உயருமா? எப்படி சாத்தியமாகும்

அதேபோல சட்டசபைகக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்தும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெற்று வார்த்தை.

இந்திய அரசியல் அமைப்பு எந்த மாநில அரசுக்கும் ஒரு நிலையான காலக்கெடு ஏதும் அளிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவராமல் ஒரே நேரத்தில் சட்டசபைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்துவது என்பது இப்போதுள்ள அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடக்காது. .

வேண்டுமென்றால், 5 முதல் 6 மாநிலங்களோடு சேர்த்து, நாடாளுமன்ற தேர்தலை நடத்திக்கொள்ளலாமே தவிர, 30 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் நடத்துவது சாத்தியமில்லை. எப்படி நடத்த முடியும்.

ஒருவேளை ஒரு மாநிலத்தில் ஆட்சி ஒரு ஆண்டில் கவிழ்ந்துவிட்டால், அடுத்த 4 ஆண்டுகளுக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவீர்களா. ஒரே தேசம், ஒரே வரி என்பதைப் போல் ஒரே தேர்தல். இவை வெற்று வார்த்தை, வெற்று வாக்குறுதி''.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x