Published : 31 Jan 2018 07:46 AM
Last Updated : 31 Jan 2018 07:46 AM

மருத்துவக் கல்லூரி ஊழல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பரிந்துரை: உயர் நீதிமன்ற நீதிபதியை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை

மருத்துவக் கல்லூரி ஊழல் விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ நாராயண் சுக்லாவை பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அவருக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டுள்ளன.

போதிய அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் தடை விதித்திருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ நாராயண் சுக்லா, சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரி நிர்வாகம் 2017-18-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் கடந்த ஆண்டு நவம்பரில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி, மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி பி.கே. ஜெய்ஸ்வால் அடங்கிய குழு வை தலைமை நீதிபதி நியமித்தார்.

இந்த உயர்நிலைக் குழு விசாரணை நடத்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அண்மையில் அறிக்கை அளித்தது. அதில், நீதிபதி ஸ்ரீ நாராயண் சுக்லாவை பணிநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி விருப்ப ஓய்வில் செல்லுமாறு நீதிபதி சுக்லாவிடம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுக்லாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் உத்தரவுப் படி இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

“பதவியில் உள்ள நீதிபதியை பணி நீக்கம் செய்ய முதலில் அவருக்கு ஒதுக்கப்பட்ட நீதிமன்ற பணிகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும். பின்னர் சம்பந்தப்பட்ட நீதிபதியை பணி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர், பிரதமருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை செய்வார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும். மக்களவையில் 100 உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களவையில் 50 உறுப்பினர்கள் தீர்மானத்தில் கையெழுத்திட்டு தாக்கல் செய்ய வேண்டும். அதன்பேரில் மாநிலங்களவைத் தலைவர், 3 உறுப்பினர்கள் அடங்கிய விசாரணை குழுவை நியமிப்பார். இந்த குழுவின் விசாரணையில், சம்பந்தப்பட்ட நீதிபதி தவறிழைத்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு எதிராக இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும். அந்த தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து நீதிபதியை பணி நீக்கம் செய்து உத்தரவிடுவார்” என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x