Published : 25 Jan 2018 08:18 AM
Last Updated : 25 Jan 2018 08:18 AM

‘பத்மாவத்’ திரைப்படம் வெளியீட்டுக்கு எதிர்ப்பு: வட மாநிலங்களில் போராட்டம் தீவிரம்

சர்ச்சைக்குரிய ‘பத்மாவத்’ திரைப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில் வட மாநிலங்களில் இப்படத்துக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான ‘பத்மாவதி’ திரைப்படத்தில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கூறப்படும் சித்தூர் ராணி பத்மினியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இப்படத்தில் சில காட்சிகளை தணிக்கை செய்தும் படத்தின் பெயரை ‘பத்மாவத்’ என மாற்றம் செய்தும் திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியது.

எனினும் ராஜஸ்தான், ம.பி., உ.பி., குஜராத் மாநில அரசுகள் இப்படத்துக்கு தடை விதித்ததால் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் சென்றது. இதில் இப்படத்தை ஜனவரி 26-ம் தேதி வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஆனால் கர்னி சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தொடர் எதிர்ப்பால் ராஜஸ்தான் மற்றும் ம.பி. மாநில அரசுகள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடின. முந்தைய உத்தரவில் மாற்றம் செய்யக் கோரின. இதனை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜஸ்தான், ம.பி. மாநில அரசுகளின் மனுக்களை தள்ளுபடி செய்தது. “நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது மாநில அரசுகளின் கடமை” என்றும் கூறியது.

எனினும் இதை ஏற்காக கர்னி சேனா உள்ளிட்ட அமைப்பினர் இப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என அறிவித்தன. இதையடுத்து ஹரியாணா, குஜராத், உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முன்தினம் மாலையே போராட்டம் தொடங்கியது. பல்வேறு இடங்களில் இப்போராட்டம் தீவிரம் அடைந்தது.

கோட்டையை தகர்க்க முயற்சி

ராஜஸ்தானில் டெல்லி - ஜெய்ப்பூர், டெல்லி - அஜ்மீர் நெடுஞ்சாலைகளில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிகார் நகரில் பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது. சித்தூர் கோட்டையை கர்னி சேனை அமைப்பினர் தகர்க்க முயன்றதால் கோட்டை மூடப்பட்டது. அங்கு பதற்றம் ஏற்பட்டது.

ஹரியாணா மாநிலம் குருகிராமில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சோன்கா என்ற இடத்தில் பஸ் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் சுமார் 30 இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்தது. கடைகள் மீதும் கற்களை வீசியது. இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கும்பலை கலைத்தனர். இங்கு தியேட்டர்களும் தாக்கப்பட்டன. இதையடுத்து கர்னி சேனா அமைப்பை சேர்ந்த 44 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அகமதாபாத்தில் நேற்று ‘பத்மாவத்’ படத்துக்கு எதிரான போராட்டத்தின்போது கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து நகரின் முக்கியப் பகுதிகளில் அதிரடிப்படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கர்னி சேனா அமைப்பைச் சேர்ந்த 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

உ.பி.யில் தலைநகர் லக்னோ, கான்பூர், முசாபர் நகர், மதுரா உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. மதுராவில் பயணிகள் ரயிலை நிறுத்தி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லக்னோவில் திரையரங்கு ஒன்றின் முன்பு போராட்டம் நடைபெற்றது.

ராஜஸ்தானில் ‘பத்மாவத்’ திரைப்பட எதிர்ப்பின் ஒரு பகுதியாக 1900 பெண்கள் தீக்குளிக்க தயாராக இருப்பதாக கர்னி சேனா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.

இதையடுத்து சித்தூர்கர் பகுதி கர்னி சேனா தலைவர் கோவிந்த் சிங் கங்காரட், துணைத் தலைவர் கம்லேந்து சிங் சோலங்கி ஆகியோரை அவர்களது வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர். மேலும், கர்னி சேனாவில் முக்கிய பிரமுகர் தேவேந்திர சிங் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

‘பத்மாவத்’ திரைப்படத்துக்கு வலுத்து வரும் போராட்டம் காரணமாக பல இடங்களில் இப்படத்தை திரையிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x