Published : 15 Jan 2018 12:41 PM
Last Updated : 15 Jan 2018 12:41 PM

சகோதரருக்காக 764 நாட்களாக போராடி வரும் கேரள இளைஞர்: பெருகும் ஆதரவு

கேரளாவில் 764 நாட்களாக தலைமை செயலகத்தின் முன் போராட்டம் செய்து வரும் இளைஞர் மீது சமூக ஊடகங்களால் வெளிச்சம் விழுந்துள்ளது.

30 வயதாகும் ஸ்ரீஜித்தின் சகோதரர், போலீஸ் காவலில் இருந்த போது அவர்களால் சித்ரவதை செய்யப்பட்டு இறந்தார். இதனால் திருவனந்தபுரத்தில் இருக்கும் தலைமைசெயலகத்துக்கு முன் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஸ்ரீஜித் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.

மாநில அரசு ஸ்ரீஜித்தின் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தாலும், மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கான கோரிக்கையை நிராகரித்தது. வழக்கின் தன்மை அரிதானதாகவோ, அபூர்வமானதாகவோ இல்லை என காரணம் தெரிவிக்கப்பட்டது. மேலும் சில நாட்களுக்கு முன்பு, சிபிஐக்கு வழக்குகளால் அதிக சுமை ஏற்பட்டுள்ளது என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஆனால் தற்போது மீண்டும் சிபிஐ விசாரணை கோர கேரள அரசு முடிவு செய்துள்ளது. ஸ்ரீஜித்தின் போராட்டம் மீது அரசு கருணையின் அடிப்படையில் மாநில அரசு இந்த மறு பரிசீலனைக்கு முடிவெடுத்துள்ளது. இதற்காக அமைச்சகத்துக்கு கடிதம் எழுத கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்ர்.

ஸ்ரீஜித்தின் சகோதரர் ஸ்ரீஜீவ் ஒரு மொபைல் போனை திருடியதாகக் கூறி பாரசால போலீஸ் 2014ஆம் ஆண்டு மே 19 அன்று அவரைக் கைது செய்தது. சிறையில் அவர் விஷம் அருந்திவிட்டார் என்று அடுத்த நாள் ஸ்ரீஜிவ் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மே 21 அன்று ஸ்ரீஜிவ் காலமானார்.

மாநில போலீஸ் புகார் ஆணையம் இந்த சம்பவத்தை விசாரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது. ஸ்ரீஜிவ் போலீஸ் காவலில் சித்ரவதைக்குள்ளானார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தப் பரிந்துரையின் பேரில் ஸ்ரீஜிவ்வின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இழப்பீடுக்கான செலவை சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளே ஏற்றுள்ளனர். மேலும் மாநில அரசு அந்த அதிகாரிகள் மீது விசாரணைக்கும் உத்தரவிட்டது. ஆனால் இந்த முடிவுக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஸ்ரீஜித்தை சந்திக்கும் கேரள அரசியல் தலைவர்கள்

முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள் தற்போது ஸ்ரீஜித்தை சந்தித்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கும்மணம் ஆகியோர் ஸ்ரீஜித்தை சந்தித்து அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மாநில அரசு இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கேட்கப்போவதாகவும், சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றத்தை அணுகுவதே ஸ்ரீஜித்துக்கு சரியான வழிமுறையாக இருக்கும் என்றும் ரமேஷ் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ரமேஷ் உள்துறை அமைச்சராக இருந்தபோது தான் இந்த சம்பவம் நடந்தது என்றும்,  மேலும், அப்போது ஸ்ரீஜித்தின் போராட்டத்தை ரமேஷ் கிண்டல் செய்தார் என்றும் ஸ்ரீஜித்தின் நண்பர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது #JusticeForSreejith என்ற ஷாஷ்டேக்கை பயன்படுத்தி பிரபலங்கள் பலர் ஸ்ரீஜித்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x