Published : 14 Jan 2018 10:15 AM
Last Updated : 14 Jan 2018 10:15 AM

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மோதல்: சமரச பேச்சு நடத்த 7 பேர் குழு நியமனம் - இந்திய பார் கவுன்சில் தகவல்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் செலமேஸ்வர் உட்பட 4 மூத்த நீதிபதிகளிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழுவை இந்திய பார் கவுன்சில் நியமித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகுர் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் நேற்று முன்தினம் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும் 4 நீதிபதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய பார் கவுன்சில் நிர்வாகிகள் டெல்லியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். இதன்பின் அதன் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா நிருபர்களிடம் கூறியதாவது:

தலைமை நீதிபதிக்கு எதிராக மூத்த நீதிபதிகள் பகிரங்கமாக பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசியது துரதிஷ்டவசமானது. இதனை தவிர்த்திருக்கலாம். இதுபோன்ற விவகாரங்களை பொது அரங்கில் விவாதித்தால் நீதித்துறை, ஜனநாயகம் பலவீனமடையும்.

தலைமை நீதிபதி மற்றும் 4 மூத்த நீதிபதிகளிடையே சமரசத்தை ஏற்படுத்த பார் கவுன்சில் சார்பில் 7 பேர் குழுவை நியமித்துள்ளோம். இந்த குழுவினர் திங்கள்கிழமை முதல் இருதரப்பையும் சந்தித்துப் பேசுவார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரையும் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிவார்கள்.

உச்ச நீதிமன்ற விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அதேநேரம் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அனைத்து கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறோம். அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு மன்னன் குமார் மிஸ்ரா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x