Published : 12 Jan 2018 10:03 AM
Last Updated : 12 Jan 2018 10:03 AM

இந்து என்பது மதம் அல்ல, வாழ்க்கை நெறி: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கருத்து

இந்து என்பது மதம் அல்ல; அது ஒரு வாழ்க்கை நெறி என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

ஆந்திராவில் உள்ள திருமலைக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு தனது குடும்பத்தினருடன் நேற்று காலை வருகை தந்தார். இதைத் தொடர்ந்து, திருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலுக்குச் சென்று அவர் வழிபட்டார். அதன் பின்னர், அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்து என்பது ஒரு மதம் அல்ல. மாறாக, ஒரு மனிதன் சுத்தமாகவும், சுகாதாரத்துடனும், ஒழுக்கமான முறையிலும் வாழ்வதற்கான சிறந்த நெறிமுறையாகும். இதில் அடங்கிய ஆன்மீகம், யோகா, கலாச்சாரம் போன்றவற்றை அமைதியை நாடும் உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. இது நமக்கெல்லாம் பெருமை தருகிற விஷயம்.

முன்னோர்கள் கூறியது போல் இந்து தர்மத்தை இறுதி வரை கடைபிடித்தல் அவசியம். மனிதத் தன்மையை இழந்து விடக்கூடாது. சக மனிதர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுக்கு இன்னல்கள் கொடுக்காமல் வாழ வேண்டும். நான் சிறுவனாக இருந்தபோது, திருமலைக்கு வந்து பல முறை சுவாமி தரிசனம் செய்துள்ளேன். அன்றைக்கு ஏற்பட்ட ஆன்மீக உணர்வை இன்றும் உணர்கிறேன். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர், பக்தர்களுக்காக சிறப்பாக பணியாற்றுகின்றனர். சாமானிய பக்தர்களுக்காக அவர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x