Last Updated : 11 Jan, 2018 10:00 AM

 

Published : 11 Jan 2018 10:00 AM
Last Updated : 11 Jan 2018 10:00 AM

கடந்த 24 ஆண்டுகளில் துப்புரவு பணியின்போது: நாடு முழுவதும் 323 தொழிலாளர்கள் பலி- தமிழகத்தில் மட்டும் 144 பேர் உயிரிழப்பு

நாட்டில் பாதாள சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்யும்போது துப்புரவு தொழிலாளர்கள் இறப்பது வழக்கமாக உள்ளது. கடந்த 1993 முதல் இவ்வாறு இறந்த தொழிலாளர்களில் அதிகபட்சமாக 45 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் முடிவடைந்தது. இதில் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி அளித்த பதிலில் இத்தகவலை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “1993 முதல் இதுவரை நாடு முழுவதிலும் 323 துப்புரவு தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். இதில் மிக அதிக அளவாக தமிழகத்தில் 144 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகாவில் 59 பேரும், உ.பி.யில் 52 பேரும் இறந்துள்ளனர்” என்றார்.

மனிதக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்காக 2013-ல் மத்திய அரசால் தடை மற்றும் மறுவாழ்வு சட்டமும் அமலாக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சட்டத்தை மீறி இப்பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது சில மாநிலங்களில் தொடர்கிறது. இப்பணியை 13 மாநிலங்களில் 12,700 பேர் தொடர்வதாக கடந்த 2016 மார்ச் மாதம் மத்திய அமைச்சகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதில் அதிக அளவாக உ.பி.யில் சுமார் 10,300 பேரும், கர்நாடகாவில் 363 பேரும் தமிழகத்தில் 322 பேரும் உள்ளதாக குறிப்பிடப்பட்டது.

தமிழகத்தில் இந்த 322 தொழிலாளர்களில் 2016-ம் ஆண்டில் 11 பேர் பணியின்போது இறந்ததாக தமிழக அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. இதில், சென்னை 5, விருதுநகர் 2, மதுரை, திருவள்ளூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என இடம் பெற்றுள்ளனர்.

எனினும், இந்த புள்ளிவிவரம் தவறானது என ‘சஃபாய் கரம்சாரி அந்தோலன் (துப்புரவு தொழிலாளர் போராட்டம்)’ என்ற தேசிய பொதுநல அமைப்பு மறுத்துள்ளது. “கடந்த 10 ஆண்டுகளில் இறந்தவர் எண்ணிக்கை 1500-க்கும் அதிகமாக இருக்கும். இதில் தமிழகத்தில் மட்டும் 294 பேர் பணியின் போது இறந்ததாக தகவல் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டும் 6 பேர் விஷவாயு தாக்கி இறந்துள்ளனர்” என்று அந்த அமைப்பு கூறுகிறது.

இதுகுறித்து இந்த அமைப்பின் தமிழக அமைப்பாளரான டி.வி.சாமுவேல் கூறும்போது, “மத்திய, மாநில அரசுகள் தங்களிடம் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்களை மட்டும் கணக்கெடுத்து வெளியிட்டு வருகின்றன. தற்காலிக, ஒப்பந்த மற்றும் தனியார் தொழிலாளர்களை கணக்கில் எடுப்பதில்லை. இதற்கு துப்புரவு தொழிலாளர்கள் இடையே சட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததும் அவர்கள் மிரட்டப்படுவதும் காரணம் ஆகும்” என்றார்.

மிரட்டும் தமிழக அதிகாரிகள்

துப்புரவு தொழிலாளர் போராட்ட அமைப்பின் சார்பில் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, கோவை, திருச்சி, நாகப்படினம், திண்டுக்கல் ஆகிய நகரங்களின் சில பகுதிகளில் மட்டும் ஒரு கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதில் 3000 பேரின் பெயர்களை முகவரியுடன் குறிப்பிட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்களை அரசு அதிகாரிகள் மிரட்டி தாம் துப்புரவு பணியில் ஈடுபடவில்லை என பிரமாணப்பத்திரம் எழுதி வாங்கி வருவதாகவும் சாமுவேல் புகார் கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x