Published : 05 Jan 2018 03:03 PM
Last Updated : 05 Jan 2018 03:03 PM

முத்தலாக் மசோதா நிறைவேறாமல் மாநிலங்களவை ஒத்திவைப்பு: குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமலேயே நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவு பெற்றது. இரு அவைகளும், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது மனைவியை உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் (முத்தலாக்) முறையை தடை செய்ய வகை செய்கிறது. இதை மீறும் ஆண்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் மசோதா வகை செய்கிறது.

இந்த மசோதா, நிலங்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதில், மாற்றங்கள் செய்ய ஏதுவாக மாநிலங்களவை தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

ஆனால, மசோதாவை தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவதில்லை என்ற முடிவில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதேநேரம் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.

குளிர்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று, மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மாநிலங்களவையில் ஆளும் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் அவையில் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுபோலவே, எதிர்க்கட்சியான காங்கிரஸும், மசோதவை எதிர்த்து வாக்களிக்க எதுவாக அனைத்து எம்.பி.க்களும் அவையில் இருக்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பித்தது.

எதிர்க்கட்சிகளிடையே ஒத்த கருத்தை ஏற்படுத்த முடியாததால், மசோதா மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறவில்லை. குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு பெற்றதாக கூறி மாநிலங்களவை தேதி குறிபிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த மசோதாவை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிறைவேற்ற அரசு முயற்சி மேற்கொள்ளும் என தெரிகிறது.

இதுபோலவே, மக்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் முத்தலாக் சட்ட மசோதா உட்பட மொத்தம், 12 மசோதாக்கள், குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x