Published : 03 Jan 2018 02:14 PM
Last Updated : 03 Jan 2018 02:14 PM

ஒத்துழைக்க மறுத்தால் தினசரி ரூ. 1 லட்சம் அபராதம்: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் எச்சரிக்கை

வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு வீணகாமல், தடையற்ற சேவை வழங்க ஒத்துழைப்பு அளிக்க தவறும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, நாள்தோறும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) எச்சரித்துள்ளது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொழில் போட்டி காரணமாக தங்களுக்கள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வருகின்றன. ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளருக்கு, மற்ற நிறுவனம் உரிய சேவையை வழங்குவதில்லை என்ற புகார் உள்ளது.

எடுத்துக்காட்டாக, டெல்லியில் வசிக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர் ஒருவர் சென்னையில் உள்ள ஜியோ வாடிக்கையாளரை தொடர்பு கொள்ள விரும்பினால், இரண்டு அம்சங்கள் சரியாக இருந்தால் மட்டுமே அவரால் சிறந்த சேவையை பெற முடியும்.

இருவரும், தாங்கள் இருக்கும் இடத்தில் சரியான நெட்வொர்க் இணைப்பில் இருப்பது அவசியம். இரண்டாவதாக, இரு நிறுவனங்களும் உரிய முறையில் அவர்களுக்கு இன்டர்கனெக்சன் வசதியை வழங்க வேண்டும்.

ஆனால் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வரும் தனியார் நிறுவனங்கள்  மற்ற நிறுவனத்துடன் ஒத்துழைக்க மறுக்கின்றன. மற்ற நிறுவனங்களுக்கு வழங்கும் சேவைக்காக, வேண்டுகோள் விடுக்கப்பட்ட 90 நாட்களுக்குள், ஒப்புதல் வழங்க வேண்டும். ஆனால், தொழில் போட்டியால் இந்த சேவை சரியான முறையில் வழங்கப்படுவதில்லை.

வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவை வழங்கி பரபரப்பை ஏற்படுத்திய ஜியோ நிறுவனம், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனக்கு இண்டர்கனெக்சன் சேவையை வழங்க மறுத்து வருவதாக புகார் தெரிவித்துள்ளது. அதேசமயம், ஜியோ நிறுவனம் இலவச சேவை வழங்கியதால், அளவில்லாத தொலைபேசி அழைப்புகள் வருவதால், நெட்வொர்க் போதுமான அளவு இல்லை என மற்ற நிறுவனங்கள் புகார் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, இந்திய தொலைத்தொடர்பு ஒழங்குமுறை ஆணையம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்டர்கனெக்சன் வழங்குவதற்கான காலக்கெடுவை 90 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைத்துள்ளது. ஒரு நிறுவனத்தின் கோரிக்கையை மற்றொரு நிறுவனம் பரிசீலித்து 30 நாட்களுக்குள் தேவையான வசதியை செய்து தரவேண்டும். தவறும் பட்சத்தில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரித்துள்ளது.

இந்த புதிய விதிமுறை தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொலைத்தொடர்பு ஆணையம் எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x