Published : 22 Dec 2017 04:19 PM
Last Updated : 22 Dec 2017 04:19 PM

பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டம் இல்லை: மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மறுப்பு

பொதுத்துறை வங்கிகள் சிலவற்றை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியான தகவல்களை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய ரிசர்வ் வங்கி இன்று (வெள்ளி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

‘‘வாராக்கடன் அதிகரித்து சில பொதுத்துறை வங்கிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், அதுபோன்ற வங்கிகளை, வங்கிகள் சீர்திருத்த நடவடிக்கையின் கீழ் மூட திட்டமிட்டுள்ளதாகவும் வதந்தி பரப்பப்படுகிறது. இதில் துளியும் உண்மையில்லை. இதுதொடர்பாக சில ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் வெளியான தகவல் உண்மையானது அல்ல. எந்தவொரு பொதுத்துறை வங்கியையும் மூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை’’ என கூறியுள்ளது.

இதுபோலவே சில வங்கிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படும் தகவலை மத்திய அரசும் மறுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி சேவைகள்துறை செயலாளர் ராஜீவ் குமார் கூறியுள்ளதாவது:

‘‘நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே வங்கிகளை மூடும் பேச்சுக்கே இடமில்லை. இதுதொடர்பாக வரும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தியே. வங்கிகளின் நிதி ஆதாரத்தை அதிகரிக்கவும், வங்கிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x