Last Updated : 17 Dec, 2017 12:58 PM

 

Published : 17 Dec 2017 12:58 PM
Last Updated : 17 Dec 2017 12:58 PM

விஐபி பாதுகாப்பில் இருந்து கறுப்பு பூனைப் படையை விடுவிக்க மறுக்கும் உள்துறை அமைச்சகம்

கறுப்பு பூனைகள் என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்புப் படையினர் (என்எஸ்ஜி), விஐபி மற்றும் விவிஐபி-க்களின் பாதுகாப்பில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை அந்தப் பணியிலிருந்து விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.

1984-ல் பஞ்சாப் பொற்கோயிலில் மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' நடவடிக்கை மற்றும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு என்எஸ்ஜி உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்து தேச நலம் காப்பது ஆகும். ஆனால் இப்படையினர் தொடக்கம் முதல் தொடர்ந்து அரசியல்வாதிகளின் பாதுகாப்பு கமாண்டோக்களாகவே செயல்படும் சூழல் நிலவி வருவதாகப் புகார் உள்ளது. இதனால் தீவிரவாத தடுப்புப் பணிகள் பாதிக்கப்படுவதால் விஐபி பாதுகாப்புப் பணியிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என என்எஸ்ஜி தரப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த ஜனவரியில் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை பரிசீலித்த உள்துறை அமைச்சகம் தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து 'தி இந்து'விடம் என்எஸ்ஜி வட்டாரத்தில் கூறும்போது, ''மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவு எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த விஷயத்தில் அவர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை என்பது தெளிவாகிறது. இந்தோ திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி), மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) ஆகியனவும் விஐபி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவர்களை மட்டும் இப்பணியில் இருந்து படிப்படியாக விடுவிப்பதாகக் கூறியுள்ள உள்துறை அமைச்சகம், எங்களுக்கு மட்டும் தற்போதைக்கு தொடருவதாகக் கூறியிருப்பது கவலை அளிக்கிறது'' என்று தெரிவித்தனர்.

கடந்த 2002-ல் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையை மட்டும் விஐபி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தலாம், மற்றவர்களை இப்பணியிலிருந்து விடுவிக்கலாம் என மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்தது. ஆனால் இந்தப் பரிந்துரை ஏனோ செயல்படுத்தப்படவில்லை. என்எஸ்ஜி-யின் கறுப்பு பூனைப்படை தற்போது 13 விஐபிக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் சிங் யாதவ், மாயாவதி, முலாயம் சிங் யாதவ், தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர். 'இசட் ப்ளஸ்' பிரிவின் கீழ் இந்தப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கப்பட்ட இந்தப் பாதுகாப்பு கடந்த மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்கு பதிலாக 'இசட்' பிரிவின் கீழ் அவருக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1988-ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு இருந்த அச்சுறுத்தல் காரணமாக, மத்திய பாதுகாப்புப் படைகளின் வரிசையில் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மட்டும் இப்படை பாதுகாப்பு வழங்கியது. பிறகு முன்னாள் பிரதமர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இது நீட்டிக்கப்பட்டது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராகுலின் சகோதரி பிரியங்கா ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கிறது. குடியரசுத் தலைவருக்கு என தனியாக ஒரு சிறப்புப் பாதுகாப்பு படை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x