Published : 17 Dec 2017 11:29 AM
Last Updated : 17 Dec 2017 11:29 AM

15 ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்படும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

வடகிழக்கு பிராந்தியத்தில் 15 ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மிஜோரம் தலைநகர் அய்ஸ்வாலுக்கு நேற்று வந்த பிரதமர் மோடி கூறும்போது, “வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களையும் ரயில் திட்டங்களின் மூலம் இணைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அதற்காக 15 ரயில்வே திட்டங்கள் ரூ.47 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்பட உள்ளன.

வடகிழக்கு பிராந்திய நகரங்களுக்கு இடையே சரியான இணைப்பு வசதி இல்லாதது இந்தப் பகுதியின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது. எனவே எனது தலைமையிலான அரசு அடிப்படை கட்டமைப்பு வசதித் திட்டங்களை அமல்படுத்துவதை விரும்புகிறது.

மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளிடையே இந்தியாவின் வர்த்தக இணைப்பை மேம்படுத்த மிஜோரம் மாநிலம் முக்கிய போக்குவரத்து முனையமாக திகழும். நாட்டு முன்னேற்றத்தின் பலன் எல்லோருக்கும் கிடைத்தால் மட்டுமே புதிய இந்தியா கனவு நனவாகும்.

வடகிழக்குப் பகுதிகளில் மொத்தம் 115 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் மிஜோரமும் அடங்கும்” என்றார்.

முன்னதாக மிஜோரமின் துரியல் நீர்த்தேக்கப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 60 மெகாவாட் நீர் மின் உற்பத்தித் திட்டத்தை, பிரதமர் மோடி தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது மோடி பேசும்போது, “துரியல் நீர் மின் உற்பத்தித் திட்டமானது இந்தப் பகுதியில் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்தும். மீன்வளத் திட்டங்களும் செயல்படுத்தப்படும். 45 சதுர கிலோ மீட்டரில் துரியல் நீர்த்தேக்கம் அருகிலுள்ள குக்கிராமங்களுக்கு இணைப்பாகவும் பயன்படும். இந்தத் திட்டத்துக்கு முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 1998-ல் அனுமதியளித்தார். சற்றுத் தாமதமாக இந்தத் திட்டம் நிறைவேறியுள்ளது. மிஜோரமின் அழகையும், மக்கள் பண்பையும் கண்டு மகிழ்கிறேன்” என்றார். - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x