Published : 16 Dec 2017 11:34 AM
Last Updated : 16 Dec 2017 11:34 AM

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பு: தலைவர்கள் வாழ்த்து

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுள்ளார். காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்கும் நேரு குடும்பத்தைச் சேர்ந்த 6-வது நபர் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் துணைத் தலைவராக இருந்துவரும் ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் நடந்து முடிந்ததையடுத்து, தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி கடந்த 4-ம் தேதி (டிச.4) வேட்புமனு தாக்கல் செய்தார். மொத்தம் தாக்கலான 89 வேட்புமனுக்களும் தலைவர் பதவிக்கு ராகுலை அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த டிச.11-ம் தேதி அவர் போட்டியின்றி ஏகமனதாக காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் முறைப்படி காங்கிரஸ் தலைவராக இன்று (சனிக்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இதற்கான விழா நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மூத்த தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

 

'இந்திராவால் இந்தியாவைத் தெரிந்து கொண்டேன்'

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ராகுலுக்கு எனது வாழ்த்துக்களையும், ஆசியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திரா காந்தி என்னை தனது மகள் போல் பார்த்துக் கொண்டார். இந்தியாவை பற்றி அவரிடம் இருந்துதான் நான் அதிகம் தெரிந்து கொண்டேன். 1984ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதால் எனது தாயை இழந்தது போன்று உணர்ந்தேன். அந்த சம்பவம் என் வாழ்க்கையையே மாற்றியது.

 

இந்திரா காந்தியின் மறைவுக்கு பின் ராஜிவ் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அவர் மறைந்த பிறகு சில காலம் கழித்து கட்சியை வழி நடத்தும் பொறுப்பை நான் எடுத்துக் கொண்டேன். கட்சி தொண்டர்கள் நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன்தான் என்னால் கட்சியை சிறப்பாக வழி நடத்த முடிந்தது.

 

 

 

மன்மோகன் சிங் புகழாரம்:

"நான் சற்று உணர்ச்சிவசப்பட்டுள்ளேன். ஏனெனில், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்திருக்கிறேன். சோனியா காந்தியின் தலைமையின் கீழ் பல முக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுத்துள்ளேன். காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 7.8% என்ற நிலையில் இருந்தது. 140 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்தோம். சோனியாவின் வழிகாட்டுதலால் இவை சாத்தியமானது. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அரசியலின் போக்கு சற்றே வருத்தமளிப்பதாக இருக்கும் சூழலில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கிறார். ராகுல் காந்தி நம்பிக்கை அரசியலை முன்னெடுத்துச் செல்வார் என நம்புகிறோம்.

ராகுல் தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி புதிய உச்சத்தை தொடும். நீங்கள் செல்லும் பாதை வெற்றி நல்க எனது ஆசிகள்"

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x