Published : 16 Dec 2017 08:28 AM
Last Updated : 16 Dec 2017 08:28 AM

வங்கி, பான் கார்டு, செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

வங்கிக் கணக்குகள், செல்போன் எண்கள், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம், ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப் படுத்தக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசால் நாடு முழுவதும் 90 சதவீதம் பேருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. இந்த ஆதார் அட்டையில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே 12 இலக்க பிரத்யேக எண்கள் வழங்கப்பட்டுள்ளன. கண் விழித்திரை, கைரேகைகள், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஆதார் அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித் துள்ளது.

இந்த நிலையில் அரசின் சமூக நல உதவித் திட்டங்களை வழங்குவதற்காக ஆதார் எண்ணுடன் வங்கி கணக்குகள், மொபைல் எண், ரேஷன் கார்டு, பான் கார்டு உள்ளிட்டவற்றை இணைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் தங்களின் வங்கிக்கணக்கில் இருந்து மக்கள் பணத்தை எடுக்க முடியாது என்றும் உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ். புட்டசாமி, மகசசே விருது பெற்ற சாந்தா சின்ஹா, பெண்ணியல் ஆராய்ச்சியாளர் கல்யாணி சென் மேனன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர் வில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் உள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக நலத் திட்டங்களில் மக்கள் பயன் பெறுவதற்கு வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் தெரிவித்தார்.

இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்க இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர்.

மேலும் ஆதார் எண் வைத்துள்ளவர்கள், புதிய வங்கிக் கணக்கு தொடங்கும்போது ஆதார் எண்ணை வழங்குவது அவசியம் என்றும் ஆதார் எண் இல்லாதவர்கள், வங்கிக் கணக்கை தொடங்கும்போது ஆதார் எண் கோரி விண்ணப்பித்ததற்கான ஆதாரத்தை மட்டும் காட்டினால் போதுமானது என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 6-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசத்தை உச்ச நீதிமன்றம்தான் நீட்டிக்க வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கோரிக்கை விடுத்திருந்தார். இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான முந்தைய உத்தரவை மாற்றி அதற்கான அவகாசத்தை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவைப் பிறப்பித்தனர்.

மேலும், அரசு நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய அரசுக்கு அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. இது இடைக்கால உத்தரவுதான் என்றும் ஆதார் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்கள் மீது அரசமைப்புச்சட்ட அமர்வு பிறப்பிக்கும் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த மனுக்கள் மீதான இறுதிக் கட்ட விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

ஆதார் எண்ணை இணைக்க கட்டாயப்படுத்துவது தனிநபர் அந்தரங்க உரிமையை மீறுவதாகவும் அரசியல் சாசனச் சட்டத்துக்கு எதிரானது என்றும் இந்த வழக்கு தொடர்ந்தவர்கள் தங்களது மனுவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சிபிஎஸ்இ நடத்தும் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற உத்தரவுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். - பிடிஐ/ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x