Published : 13 Dec 2017 10:18 AM
Last Updated : 13 Dec 2017 10:18 AM

ஜார்க்கண்டில் தம்பதிகளுக்கான முத்தப் போட்டி: விவாகரத்துகளை தடுக்கவே நடத்தியதாக ஏற்பாட்டாளர் விளக்கம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருமணமான தம்பதிகளுக்கான முத்தப் போட்டி நடைபெற்றது. விவாகரத்துகளைத் தடுக்கவே இந்தப் போட்டியை நடத்தியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், கொட்டா மாவட்டம், துமரியா கிராமத்தில் பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்கு கடந்த 37 ஆண்டுகளாக வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா ஏற்பாடுகளை அப்பகுதியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏ சைமன் மராண்டி செய்திருந்தார். இவ்விழாவில் பழங்குடியினர் நடனம், வில்வித்தை மற்றும் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு முதல் முறையாக திருமணமான தம்பதிகளுக்கான முத்தப் போட்டியும் நடைபெற்றது. இதில் சுமார் 20 தம்பதிகள் பங்கேற்று முத்தம் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். நீண்ட நேரம் முத்தம் பரிமாறிக்கொண்ட தம்பதிக்கு பரிசு வழங்கப்பட்டது. பொதுவெளியில் நடைபெற்ற இந்தப் போட்டியை ஆயிரக்கணக்கானோர் பார்த்தனர். இந்நிலையில், இந்தப் போட்டிக்கு பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து சைமன் மராண்டி கூறும்போது, “சமீபகாலமாக திருமண தம்பதிகள் விவாகரத்து செய்துகொள்வது அதிகரித்து வருகிறது. எனவே கணவன் மனைவி இடையிலான உறவை பலப்படுத்துவதற்காக இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இதன்மூலம் தம்பதிகளுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளும் விவாகரத்துகளும் குறையும்” என்றார்.

ஏற்கெனவே ‘கிஸ் ஆப் லவ்’ உள்ளிட்ட இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அப்போது, இந்திய கலாச்சாரத்தை மீறியதாகக் கூறி, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x