Published : 04 Dec 2017 07:09 PM
Last Updated : 04 Dec 2017 07:09 PM

மூத்த இந்தி நடிகர் சசிகபூர் காலமானார்

 

மூத்த இந்தி நடிகர் சசிகபூர் மும்பையில் திங்கட்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 79.

மும்பையில் உள்ள கோகிலாபென் திரூபாய் அம்பானி மருத்துவமனையில் டிசம்பர் 4, மாலை 5.20 மணிக்கு சசிகபூர் உயிர் பிரிந்தது.

ஆனால் ஞாயிறன்று இவர் மார்பு கிருமி தொற்று காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவருக்கு ஒருமுறை பைபாஸ் அறுவை சிகிச்சையும் நடந்தது.

இவர் கிட்னி பாதிக்கப்பட்டு நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்தார், ரத்தச்சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) சிகிச்சை அவர் எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நீண்ட காலம் சக்கரநாற்காலியில்தான் அவர் காலம் கழிந்தது.

இவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க் கிழமை நடைபெறுகிறது. இவர் ராஜ்கபூர், ஷம்மி கபூரின் இளைய சகோதரர் ஆவார். சசிகபூருக்கு மகள் சஞ்சனா கபூர், மகன்கள் குனால் மற்றும் கரன் ஆகியோர்கள் உள்ளனர்.

1961-ம் ஆண்டு சசிகபூர் ‘தர்மபுத்திரா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து 116 இந்திப் படங்களில் நடித்தார். 2011-ம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது கொடுத்து மத்திய அரசு கவுரவித்தது.

2015-ல் சசிகபூர் தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றார். கபூர் குடும்பத்தில் இந்த விருதைப் பெறும் 3-வது நடிகரானார் சசிகபூர்.

சசிகபூரும் மனைவி ஜெனிபரும் மும்பையில் நவம்பர் 1978-ல் பிரித்வி தியேட்டரை நிறுவினர். 1984-ம் ஆண்டு மனைவி ஜெனிபர் புற்று நோயால் மரணமடைந்தார்.

மைய நீரோட்ட திரைப்படங்களில் பிரபலமானாலும் இணை சினிமா இயக்கத்தையும் சசிகபூர் ஊக்குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'தீவார்', 'நமக்ஹலால்', 'ஹீராலால் பன்னாலால்', 'கபீகபீ', 'சில்சிலா' இன்னபிற பிரபல ஹிட் திரைப்படங்களில் நடித்த சசிகபூர் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மெர்சண்ட் ஐவரி தயாரிப்பான 'தி ஹவுஸ் ஹோல்டர்' , 'ஷேக்ஸ்பியர்வாலா', 'பாம்பே டாக்கி', 'ஹீட் அண்ட் டஸ்ட்' ஆகிய படங்கள் அந்த வகையில் குறிப்பிடத்தகுந்த படங்களாகும்.

நாடகங்களிலும் அதீத ஈடுபாடு கொண்டவர் சசிகபூர், அதனால்தான் இவர் மனைவி ஜெனிபரை இவர் அடையாளம் காண முடிந்தது. ஜெனிபர் நாடகக் கலைஞர் என்பதும் கவனிக்கத்தக்கது.

தாதாசாகிப் பால்கே விருது வழங்கப்பட்ட போது அரிதாக பொதுவெளியில் முகத்தைக் காட்டினார். இவருடன் நடித்த பிரபல நடிகைகளான வஹீதா ரஹ்மான், ஹேமமாலினி, ஜீனத் அமன் மற்றும் ஷப்னா ஆஸ்மி ஆகியோருடன் சசிகபூர் இருக்கும் அந்தப் புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாலிவுட் இவரது மறைவுக்கு பல்வேறு வழிகளில் புகழஞ்சலி செலுத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x