Published : 02 Dec 2017 08:56 AM
Last Updated : 02 Dec 2017 08:56 AM

உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோகம்; காங்கிரஸ், சமாஜ்வாதிக்கு பெரும் பின்னடைவு: 14 மாநகராட்சிகளை கைப்பற்றியது

உத்தர பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. 2 மாநகராட்சிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் வெற்றி பெற்றது. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட் டுள்ளது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றியது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக கூட்டணி 325 இடங்களில் வெற்றி பெற்றது. கோரக்பூர் மடாதிபதி யோகி ஆதித்யநாத் கடந்த மார்ச் 19-ம் தேதி மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றார்.

அவர் ஆட்சிப் பொறுப்பேற்று 8 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 3 கட்டங்களாக நடைபெற்றது. 16 மாநகராட்சிகள், 198 நகராட்சிகள், 438 பஞ்சாயத்துகள் உட்பட மொத்தம் 652 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நவம்பர் 22, 26, 29 தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக 79,113 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் நேற்று வெளி யாகின.

மொத்தம் உள்ள 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றியது. தலைநகர் லக்னோ மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் சயுக்தா பாட்டியா வெற்றி பெற்றார். கடந்த 1916-ம் ஆண்டில் லக்னோ மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 100 ஆண்டுகளில் முதல்முறையாக சயுக்தா பாட்டியா பெண் மேயராக பதவியேற்க உள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்ட அயோத்தி மாநகராட்சியின் மேயராக பாஜக வேட்பாளர் ரிஷிகேஷ் உபாத்யாயா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் வாரணாசி, கோரக்பூர், காஜியாபாத், பரேலி, ஆக்ரா, பெரோஷாபாத், மதுரா, கான்பூர், சஹரான்பூர், ஜான்ஸி, மொராதாபாத், அலகாபாத் ஆகிய மாநகராட்சிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது.

அலிகார் மேயர் தேர்தலில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் முகமது பர்கானும், மீரட் மேயர் தேர்தலில் அதே கட்சியைச் சேர்ந்த சுனிதா வர்மாவும் வெற்றி பெற்றனர்.

மாநிலம் முழுவதும் உள்ள 198 நகராட்சிகளில் 67 நகராட்சிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. சமாஜ் வாதி 45, பகுஜன் சமாஜ் 28, காங்கிரஸ் 9 நகராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளன. 438 பஞ்சாயத்துகளில் பாஜக 100, சமாஜ்வாதி 83, பகுஜன் சமாஜ் 45, காங்கிரஸ் 17 இடங்களைப் பிடித்துள்ளன.

ஒட்டுமொத்தமாக பாஜக முதலிடத்திலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் 2-வது இடத்திலும் உள்ளன. சமாஜ்வாதி, காங்கிரஸுக்கு இத்தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் யோகி கருத்து

தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியபோது, ‘‘பிரதமர் நரேந்திரமோடியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளிலும் பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் வளர்ச்சிப் பணிகள் வேகமாக நடைபெறும். அமேதி தொகுதியின் உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டுள்ளது. இங்கு வெற்றி பெற முடியாதவர் (ராகுல் காந்தி) குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவார். வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 100 சதவீத வெற்றி பெறும்’’ என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி வாழ்த்து

பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டர் பதிவில், வெற்றிக்காக உழைத்த முதல்வர் யோகி ஆதித்யநாத், தொண்டர்கள், வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x