Published : 01 Dec 2017 09:45 AM
Last Updated : 01 Dec 2017 09:45 AM

ரூ.500, 1000 பணமதிப்பு நீக்கம் என்பது சட்டவிரோத பணப் பரிமாற்ற திட்டம்: குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சட்டவிரோத பணப் பரிமாற்ற திட்டம்தான் பணமதிப்பு நீக்கம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் 9 மற்றும் 14-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அம்ரேலி நகரில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் ராகுல் பேசியதாவது:

பணமதிப்பு நீக்க திட்டம் திடீரென அமல்படுத்தப்பட்டது. 500, 1000 ரூபாய் நோட்டுகளை விரும்பாததால் மோடி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம். இந்த நடவடிக்கையால் நாடு முழுவதும் ஏழை, நடுத்தர மக்கள் தங்களிடமிருந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி இருந்தது.

ஆனால் தங்களிடமிருந்த ரூபாயை மாற்ற தொழிலதிபர்கள் எந்த வங்கிக்கு முன்பாவது வரிசையில் காத்திருந்ததைப் பார்க்க முடிந்ததா? அவர்கள் வங்கியின் பின்வாசல் வழியாக சென்று தங்கள் கறுப்புப் பணத்தைக் கொடுத்து மாற்றிக் கொண்டார்கள். மொத்தத்தில் பண மதிப்பு நீக்கம் என்பது சட்டவிரோத பணப்பரிமாற்ற திட்டம்.

மத்தியில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் வருமானம் பல மடங்கு அதிகரித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது. அதாவது முதலில் நஷ்டத்தில் இயங்கிய அந்த நிறுவனம், பின்னர் ரூ.50 ஆயிரம் வருமானம் ஈட்டியது. அடுத்த மூன்று மாதத்தில் ரூ.80 கோடியாக உயர்ந்தது இது எப்படி சாத்தியம்?” என்றார்.

இதனிடையே, கடந்த தேர்தலின்போது பாஜக கொடுத்த வாக்குறுதிகளை மையமாக வைத்து, ட்விட்டரில் நாள்தோறும் ஒரு கேள்வி எழுப்பப் போவதாக ராகுல் காந்தி நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இதன்படி 2-ம் நாளான நேற்று ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், “குஜராத் மாநிலம் தொடர்பாக பிரதமருக்கு 2-வதாக ஒரு கேள்வியை கேட்கிறேன். 1995-ல் மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.9,183 கோடி. 2017-ல் இது ரூ.2.41 லட்சம் கோடி.

அதாவது மாநிலத்தில் தனி நபர் மீதான சராசரி கடன் ரூ.37 ஆயிரமாக அதிகரித்துள்ளது. பிரதமரைப் பற்றிய விளம்பரத்துக்கும் அவரது தவறான நிதி நிர்வாகத்தால் ஏற்படும் கடன் சுமையை பொதுமக்கள் ஏன் செலுத்த வேண்டும்” என கேள்வி எழுப்பி உள்ளார்.

முதல் நாளில் ராகுல், “கடந்த 22 ஆண்டுகளில் நடந்த தேர்தலின்போது பாஜக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றாதது ஏன் என மக்கள் கேட்கிறார்கள். இதற்கு மோடி பதில் அளிக்க வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x