Published : 30 Nov 2017 09:49 AM
Last Updated : 30 Nov 2017 09:49 AM

இந்தியாவில் சிகிச்சை பெற மேலும் 4 பாகிஸ்தானியருக்கு விசா: மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி

இந்தியாவில் சிகிச்சை பெற விரும்பும் மேலும் 4 பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ விசா வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்துள்ளார்.

வரும் டிசம்பர் 20-ம் தேதி தனது 3 வயது மகனுக்கு இந்திய மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் மருத்துவ விசா வேண்டும் என பாகிஸ்தானைச் சேர்ந்த மஸ்ரூர் அக்தர் சித்திக்கி ட்விட்டரில் கோரியிருந்தார்.

இதற்கு சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் அளித்த பதிலில், “உங்கள் மகனுக்கு மருத்துவ விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் சோஹைல் ஆர்பி என்பவர் தனது 14 வயது மகள் ஹாதியா ஆர்பிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய விசா வேண்டும் என கோரியிருந்தார். இதற்கு சுஷ்மா அளித்த பதிலில், “இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்தை அணுகி விசா பெற்றுக் கொள்ளலாம்” என பதிவிட்டுள்ளார்.

இதுபோல, முகமது டியாப் மற்றும் 9 வயது சிறுவன் அப்துர் ரஹ்மான் ஆகியோருக்கும் மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ விசா வழங்கப்படும் என சுஷ்மா உறுதி அளித்துள்ளார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் அந்நாட்டு ஆதரவுடன் இந்தியாவில் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், இந்தியாவில் சிகிச்சை பெற விரும்பும் பாகிஸ்தானியர் அந்நாட்டு பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸிடமிருந்து கடிதம் பெற்று வர வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த மே மாதம் தெரிவித்திருந்தது.

இது வெளியுறவுக் கொள்கையை மீறும் செயல் என பாகிஸ்தான் தெரிவித்தது. இதையடுத்து, தகுதியுடைய அனைத்து பாகிஸ்தான் நோயாளிகளுக்கும் விசா வழங்கப்படும் என ஆகஸ்ட் 15-ம் தேதி மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x