Published : 24 Nov 2017 12:57 PM
Last Updated : 24 Nov 2017 12:57 PM

கேரளா குவாரி விபத்தில் இருவர் பலி; 6 பேர் காயம்

 கேரள - தமிழக எல்லைக்கு அருகில் உள்ள குன்னத்துக்கல் பகுதியில் உள்ள குவாரில் மிகப்பெரிய கிரானைட் துண்டு விழுந்ததில் இரண்டு பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றுள்ளது.

பலியானவர்களில் ஒருவர் சேலத்தைச் சேர்ந்த சதீஷ் என்பதும் மற்றொருவர் மலக்குலங்கரா பகுதியில் வசிக்கும் பினில் குமார் என்றும் தெரியவந்துள்ளது.

வேலையைத் தொடங்குவதற்காகத் தொழிலாளர்கள் அனைவரும் காலையில் காத்திருந்தபோது பெரிய கிரானைட் துண்டு பெயர்ந்து பணியாளர்கள் மீது விழுந்துள்ளது. இதில் இருவர் உயிரிழக்க, ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரையும் உள்ளூர் மக்களின் உதவியோடு காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

அவர்களில் நால்வர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மரயமுட்டம் தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

விபத்து குறித்து ஊடகங்களிடம் பேசிய உள்ளூர் எம்எல்ஏ சி.கே.ஹரீந்திரன், குவாரி முறையான அனுமதி இல்லாமல் இயங்கிவந்ததாகத் தெரிவித்தார்.

குவாரி விபத்தால் ஆத்திரமடைந்துள்ள உள்ளூர் மக்கள், ''முறையான அனுமதி இல்லாமல் இயங்கிய குவாரிகளை மூடக்கோரி முன்னதாகவே போராட்டம் நடத்தினோம். ஆனால் குவாரி அதிபர்களுக்கு உடந்தையாக இருந்த உள்ளூர் அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் அதைக் கண்டுகொள்ளவில்லை'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x