Published : 17 Nov 2017 08:59 AM
Last Updated : 17 Nov 2017 08:59 AM

டெல்லியில் காற்று மாசு குறைகிறது: லாரிகள், கட்டுமான பணிக்கான தடை நீக்கம்

டெல்லியில் காற்று மாசுபாடு சற்று குறைந்துள்ளதால், லாரிகள் நுழையவும், கட்டுமானப் பணி மேற்கொள்ளவும் விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நீக்கப்பட்டது. மேலும் 4 மடங்கு உயர்த்தப்பட்ட வாகன நிறுத்துமிட கட்டணமும் திரும்பப் பெறப்பட்டது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் (இபிசிஏ) இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

டெல்லியில் பனிப்புகை மற்றும் காற்று மாசுபாடு அபாய அளவுக்குச் சென்றதால் கடந்த 7-ம் தேதி சுகாதார அவசர நிலையின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், டெல்லியில் நேற்று காலை 11 மணிக்கு காற்றின் தரக்குறியீடு அபாய கர அளவில் இருந்து ‘மிக மோசம்’ என்ற அளவுக்கு சற்று முன்னேறியது. காற்றில் பிஎம்2.5 துகள்களின் சராசரி அளவு 345 யூனிட் ஆக இருந்தது. இது பாதுகாப்பான அளவைவிட 14 மடங்கு அதிகம் ஆகும். ஆனால் இது கடந்த செவ்வாய்க்கிழமை 397 யூனிட்களாக இருந்தது.

இந்நிலையில், டெல்லி, உ.பி., பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில தலைமைச் செயலாளர்களுக்கு இபிசிஏ தலைவர் புரேலால் நேற்று கடிதம் எழுதினார்.

டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளதால் கடந்த 7-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தடைகளில் சிலவற்றை விலக்கிக்கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

இதையடுத்து, டெல்லியில் லாரிகள் நுழையவும், கட்டுமானப் பணி மேற்கொள்ளவும் விதிக்கப்பட்ட தடை நேற்று நீக்கப்பட்டது. மேலும் 4 மடங்கு உயர்த்தப்பட்ட வாகன நிறுத்துமிட கட்டணமும் திரும்பப் பெறப்பட்டது.

ஆனால், டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் உள்ள பரத்பூர் அனல்மின் நிலையம், செங்கல் சூளைகள், கல் குவாரிகள், கொதிகலவை ஆலைகளின் செயல்பாட்டுக்கும், டீசல் ஜெனரேட்டர் பயன்பாட்டுக்கும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

4 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு புரேலால் எழுதிய கடிதத்தில், “டெல்லியில் காற்றின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் வரும் நாட்களில் காற்று மாசுபாடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து உங்களுக்கு தெரிவிப்போம்” என்றும் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக கடந்த 7-ம் தேதி முதல் பல்வேறு தடைகள் அமலில் உள்ளன. ஆனாலும், டெல்லி அரசு - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக, வாகனக் கட்டுப்பாட்டை மட்டும் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

அனல்மின் கழகம் டெண்டர்

டெல்லி காற்று மாசுபாட்டுக்கு, அண்டை மாநிலங்களில் நெல் வயல்களில் வைக்கோல் எரிக்கப்படுவதும் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் நேற்று கூறும்போது, “ஒரு ஏக்கர் நிலத்தில் சராசரியாக 2 டன் வைக்கோல் உற்பத்தியாகிறது. இந்த வைக்கோலை டன்னுக்கு ரூ.5,500 என்ற விலையில் தேசிய அனல்மின் கழகம் (என்டிபிசி) வாங்கிக் கொள்ளும். மின்உற்பத்தி நிலையங்களுக்கு இந்த வைக்கோல் பயன்படுத்தப்படும். வைக்கோல் வாங்குவது குறித்த டெண்டரை என்டிபிசி அடுத்த சில நாட்களில் வெளியிடும். இதன்மூலம் வயல்களில் வைக்கோல் எரிக்கப்படுவது தடுக்கப்படும். மேலும், விவசாயிகளும் ஏக்கருக்கு ரூ.11,000 வருவாய் ஈட்ட முடியும்” என்றார்.

பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

இதற்கிடையே டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இன்னும் 2 மாதங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை தங்கள் வளாகங்களில் ஏற்படுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு ஏற்படுத்தாத பள்ளி, கல்லூரிகள் சுற்றுச்சூழல் நிவாரணமாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகள் கொண்ட குழுவை தீர்ப்பாயம் அமைத்துள்ளது. மழைநீர் சேகரிப்பு கட்டுமானப் பணிகள் தொடர்பாக இந்தக் குழுவை அணுகுமாறும் பள்ளி, கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x