Published : 14 Nov 2017 05:44 PM
Last Updated : 14 Nov 2017 05:44 PM

80,000 மெட்ரிக் டன் காய்கறிகள்: இயற்கை விவசாயத்தில் சிறகடிக்கும் சிக்கிம்

 

ரசாயனங்கள் இல்லாத இயற்கை விவசாயத்தில் முன்னோடி மாநிலமாக விளங்கும் சிக்கிம், கடந்த நிதியாண்டில் 80,000 மெட்ரிக் டன்கள் காய்கறிகள் சாகுபடி செய்து இமாலய சாதனை புரிந்துள்ளது.

சிக்கிம் மாநில மக்கள் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் நீண்டகாலமாகவே விவசாயம் செய்து வருகின்றனர். நவீன முறை விவசாயத்திற்கு மாறாமல் தாங்கள் பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் விவசாய முறையை தொடர்ந்து கடை பிடித்து வருகின்றனர்.

இதையடுத்து சிக்கிம் மக்களின் விவசாயத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அம்மாநிலத்தில் 76,393 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் நடந்து வருகிறது. மிளகு, ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், கோதுமை, பழ வகைகள் அங்கு பயிரிடப்பட்டு வருகின்றன. இதனால் சிக்கிம் முழுமையான இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாக உருவெடுத்துள்ளது.

 

இந்நிலையில், மக்கள் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளை அதிகஅளவில் இயற்கை முறையில் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 14 ஹெக்டேர் பரப்பளவில் பல்வேறு விதமான காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இதற்காக சிக்கிம் அரசின் தோட்டக்கலைத் துறை, அம்மாநில விவசாயிகளுக்கு தேவையான விதைகள், இடுபொருட்களை வழங்கி வருகிறது.

இதன் பயனாக கடந்த நிதியாண்டில் 80,000 மெட்ரிக் டன்கள் அளவிற்கு இயற்கையான முறையில் காய்கறிகள் அம்மாநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில தோட்டகலைத்துறை செயலாளர் கோர்லா பூட்டியா கூறுகையில் ''சிக்கிம் மக்கள் ஏற்கெனவே இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். எனினும், அவர்கள் அதிக லாபம் ஈட்டும் வகையில் தோட்டக்கலை துறை சார்பில் காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி செய்ய ஊக்குவித்து வருகிறோம். இதற்காக இயற்கை விவசாய திட்ட மேம்பாட்டு நிறுவனம் என்ற தனி அமைப்பை உருவாக்கியுள்ளோம். முதல் ஆண்டிலேயே நல்ல பலன் கிடைத்துள்ளது.

முதல் ஆண்டிலேயே 80,000 மெட்ரிக் டன்கள் அளவிற்கு இயற்கையான முறையில் காய்கறிகள் சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் இந்த அளவு அதிகரிக்கும். இவை 100 சதவீதம் ரசாயனம் இல்லாமல் இயற்கையான முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 24,000 விவசாயிகளும், 24 விவசாய அமைப்புகளும் இந்த சாதனையின் பின்னணியில் உள்ளன. விவசாயிகள் விளைவித்த காய்கறிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கவும், அவர்களுக்கு தேவையான விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x