Published : 29 Oct 2017 09:28 AM
Last Updated : 29 Oct 2017 09:28 AM

ஆட்சியாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப சட்டம் இயற்றுவது சரியா? - புதிய ஆட்சி முறைக்கு மாறுமா இந்தியா

படித்தவரை கேளுங்கள் அல்லது கைத்தேர்ந்த அரசியல்வாதியை கேளுங்கள், நாமிருக்கும் ஆட்சிமுறை எதுவென்று. பெரும்பாலான அரசியல்வாதிகள் கூறுவார்கள் நம் ஆட்சிமுறை மக்களாட்சி முறையென்று. சற்று யோசித்துப் பாருங்கள் இது சரியா? மக்களாகிய நாம் ஆட்சி செய்கிறோமா? உண்மையை சொல்லப்போனால் இது மக்களாட்சி அல்ல. நாம் நேரடியாக ஆட்சி புரிவதில்லை. நாம் ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுக்கிறோம்.

அதாவது சட்டப்பேரவைக்கு ஒரு சட்டப்பேரவை உறுப்பினரையும், நாடாளுமன்றத்துக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் தேர்ந்தெடுக்கிறோம். அவர் நம் விருப்பு வெறுப்பு அறிந்து அதை சட்டப்பேரவையில் அல்லது நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்குப் பெயர் பிரதிநிதித்துவ ஆட்சிமுறை. மக்களாட்சி முறையல்ல. ஆங்கிலத்தில் இதை பிரதிநிதித்துவ ஜனநாயகம் (Representative Democracy) என்று கூறுவார்கள். இம்முறையை மக்களாட்சி என்று மிகவும் தந்திரமாக பெயர் சூட்டியதால் நாமும் மக்களாட்சி என்று மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

மக்னா கர்த்தா தெரியுமா உங்களுக்கு ?

தற்கால ஆட்சி முறை மக்னா கர்த்தா (Magna Carta) என்னும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. 1215-ல் இங்கிலாந்தின் அரசருக்கும் அங்குள்ள பெருமுதலாளிகளுக்கும் மற்றும் கிறிஸ்தவ திருச்சபைக்கும் இடையே ஏற்பட்டதுதான் இந்த ஒப்பந்தம். இதன்படி இங்கிலாந்து அரசர், பெருமுதலாளிகள் மற்றும் கிறிஸ்தவ திருச்சபையின் ஒப்புதலின்றி வரி விதிக்கவோ, முன்போல் நினைத்தவருக்கு தண்டனை வழங்கவோ கூடாது என்பன உள்ளிட்ட பல விதிகளை உள்ளடக்கியது இந்த ஒப்பந்தம்.

25 பெரு முதலாளிகள் கொண்ட ஒரு சபை ஏற்படுத்தப்பட்டது. இந்த சபையின் ஒப்புதலின்றி இங்கிலாந்து அரசர் எந்த முடிவையும் எடுக்க முடியாது. ஆகவே கூர்ந்து நோக்கினால் இது மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் அல்ல. ஆனால் அந்தக் காலத்தில், இதன்மூலம் மக்களுக்கும் பல நன்மைகள் ஏற்பட்டன. அதனால் மக்களும் அப்போது வரவேற்றனர். இந்த பெருமுதலாளிகளின் சபை அமைப்புதான் தற்கால நாடாளுமன்ற அமைப்புக்கு அடிப்படையாக அமைந்தது. இன்றும்கூட மக்களாகிய நாம், நம்மை அறியாமலேயே உரிமைகளை பெருமுதலாளிகளிடம் கொடுத்துவிட்டோம். இப்போதிருக்கும், அதாவது இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு உள்ள ஆட்சிமுறைகூட, ஆட்சியாளர்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும், மதத் தலைவர்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இந்த அடிப்படை நமக்கு தெரியாமல் ‘மக்களாட்சி’ என்ற போர்வையை போர்த்தி நெடுங்காலமாய் நம்மை மறக்கடித்து வைத்திருக்கிறார்கள்.

பிரதிநிதித்துவ அரசியல் தோல்வி

மக்னா கர்த்தா முறை கடந்த 800 ஆண்டுகளில் சிறிது சிறிதாக மாறி, தற்போதுள்ள ஆட்சி முறையாக உருவெடுத்துள்ளது. இந்த பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியல் முறை சில ஊகங்களை அடிப்படையாகக் கொண்டது. மிக முக்கியமாக ஒவ்வொரு தொகுதியிலும் நாம் ஒரு நல்லவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு நல்லவரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போதுள்ள ஆட்சி முறையில் பெரிய சிக்கல் என்னவென்றால், தேர்தலில் போட்டியிடும் பிரதிநிதி நல்லவரா, கெட்டவரா என்று பார்க்காமல் அவர் சார்ந்திருக்கும் கட்சியையோ, அதன் தலைவரையோ அடிப்படையாகக் கொண்டு வாக்களிக்கிறோம். சரியாக சொல்லப்போனால் ஒரு சின்னத்துக்கே வாக்களிக்கிறோம். அதனால் நமக்கு புதிய ஆட்சிமுறை தேவை.

அரசியல் ஆட்சி முறையிலும் முன்னோடியான முறையை முன்னெடுக்க வேண்டும். அதுவே நேராட்சி. ஆட்சி யின் முக்கிய முடிவுகளில் மக்களின் நேரடி ஒப்புதல் இருக்க வேண்டும். முக்கிய சட்டங்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். நீதிபதி போன்ற உயர் பதவி நியமனங்களில் மக்களின் ஒப்புதல் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை திரும்பப் பெறும் வசதியும் இருக்க வேண்டும்.

ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, மக்களின் ஒப்புதல் இல்லாமல் சட்டங்களை இயற்றி, நீதிபதிகளை நியமித்துவரும் நிலை மாற வேண்டும். இதைச் செயல்படுத்த தொழில்நுட்பம் பெரும் உதவியாக இருக்கும். குறிப்பாக இந்தியா மக்கள் தொகை அதிகமான நாடு. காகிதம் மூலம் ஒவ்வொரு முறையும் மக்கள் தங்கள் விருப்பு வெறுப்பை தெரிவிக்க வேண்டியிருந்தால் அதற்கு நேரமும் செலவும் அதிகமாகும். இப்போது மக்கள் தங்கள் வாக்குகளை பிக் பாஸ் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் செலுத்தி வருகிறார்கள். இன்னும் 15 - 20 ஆண்டுகளில் தொழில்நுட்பமும், மக்களின் மனோநிலையும் பெரிதாக முன்னேறியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு வகையில் பிக் பாஸ் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் அவை மக்களை இணையவழி வாக்கு (e-voting) முறைக்கு தயார்படுத்துகிறது. ஆதலால் 2030-ல் நேராட்சி என்பது வெறும் கனவல்ல. இம்முறை நடைமுறைக்கு வருமானால் தற்காலத்து அரசியல்வாதிகளின் முக்கியத்துவம் குறைந்து புதிய சமூக நலம் கொண்டவர்கள் வருவதற்கு வாய்ப்பு நிறைய இருக்கிறது.

சுவிட்சர்லாந்து ஒரு முன்னோடி

புதியதாக எதைச் சொன்னாலும் அதை எதிர்க்க ஒரு கூட்டம் இருக்கும். அந்தக் கூட்டத்துக்காகவே இந்த கடைசி பத்தியை எழுதுகிறேன். நேராட்சி புதிய முறை அல்ல. உலகிலேயே முன்னோடி நாடாக திகழ்வது அமெரிக்கா அல்ல, ஐரோப்பாவிலுள்ள ஒரு சில நாடுகள் ஆகும். அதில் குறிப்பாக பின்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து. அந்நாட்டு மக்கள் ஆட்சியாளர்கள் இயற்றும் சட்டத்தை பல முறை ரத்து செய்திருக்கிறார்கள்.கடந்த 120 ஆண்டுகளில் ஆட்சியாளர்கள் முன்மொழிந்த 240 சட்டங்களில் வெறும் 10 சதவீத சட்டங்களுக்கு மட்டுமே மக்கள் அங்கீகாரம் கொடுத்தார்கள். 120 ஆண்டுகளாக இந்த வழக்கம் அங்கு வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நம் நாட்டிலும் இதை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமே. இதற்கு புரட்சி சிந்தனை கொண்ட தலைவன் தேவை. இதில் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தத் தலைமை முன்னெடுக்கும் முயற்சி இறுதியில் தானே தலைவனாக இருக்க வேண்டிய அவசியத்தை அழித்தொழிக்கும் வீறுகொண்ட முயற்சி. மக்களைத் திரட்டி மக்களிடமே அதிகாரத்தை ஒப்படைப்பது.

நேராட்சி முறையை நுணுக்கமான முறையில் செயல்படுத்த வேண்டும். ஏனெனில், அது மிகவும் மேம்பட்ட ஒரு கருத்து. இப்போது இருப்பது போல ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பது உட்பட பல விதிகளை சீர்தூக்கி ஆராய வேண்டும். நேராட்சி என்ற புதிய ஆட்சி முறையை இளைஞர்களின் மனதில் விதைப்பது தான் இந்த கட்டுரையின் முக்கிய நோக்கம் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x