Published : 21 Oct 2017 08:36 AM
Last Updated : 21 Oct 2017 08:36 AM

மொபைல் செயலி மூலம் ரூ.10 செலவில் பத்தே நிமிடத்தில் மலேரியாவை கண்டுபிடிக்கலாம்

ரூ.10 செலவில் பத்தே நிமிடங்களில் மலேரியா காய்ச்சலை கண்டுபிடிக்கும் மொபைல் செயலியை கொல்கத்தா மாணவர்களும் பேராசிரியர்களும் கண்டு பிடித்துள்ளனர்.

தனியார் ஆய்வகங்களில் பொதுவாக ஒரு ரத்த பரிசோதனைக்கு குறைந்தபட்சம் ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பரிசோதனை முடிவை அறிந்து கொள்ள சுமார் 8 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது.

மலேரியா காய்ச்சலை கண்டறிய, ரத்த அணுக்களில் கிருமி பரிசோதனை, எதிர் அணுக்கள் பரிசோதனை, கியூபிசி பரிசோதனை, ஆர்.டி.-சி.சி.ஆர். மற்றும் நெஸ்டெட் பி.சி.ஆர். பரிசோதனை, ரத்த அணுக்கள் மொத்த பரிசோதனை என்பன உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப் படுகின்றன.

இதற்கு மாற்றாக கொல்கத்தா ஐஇஎம் இன்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் நிலஞ்ஞன் டா, தேவபிரியா பால் மற்றும் ஐஐஇஎஸ்டி பேராசிரியர்கள் இணைந்து ரூ.10 செலவில் பத்தே நிமிடங்களில் மலேரியா காய்ச்சலை கண்டு பிடிக்கும் மொபைல் செயலியை கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்க இந்தியர் உதவி

அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளி பேராசிரியர் மனு பிரகாஷ் கடந்த 2014-ம் ஆண்டில் ‘போல்டுஸ்கோப்’ என்ற குறைந்தவிலை நுண்ணோக்கியை உருவாக்கினார். இதன் விலை ஒரு டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ.70. கொல்கத்தா மாணவர்களின் ஆராய்ச்சிக்காக அமெரிக்காவில் உள்ள மனு பிரகாஷின் ஆய்வகம், 2 போல்டுஸ்கோப் நுண்ணோக்கிகளை அனுப்பி வைத்தது.

இந்திய மாணவர்கள் சாதனை

இந்த நுண்ணோக்கிகளை அடிப்படையாக வைத்து கொல்கத்தா மாணவர்களும் பேராசிரியர்களும் இணைந்து புதிய மொபைல் செயலியை உருவாக்கினர். முதலில் ஸ்மார்ட்போனில் நுண்ணோக்கியை பொருத்த வேண்டும். அந்த நுண்ணோக்கி யில் நோயாளியின் ஒரு சொட்டு ரத்தத்தை தோய்க்க வேண்டும். அதனை ஸ்மார்ட்போன் கேமரா படம் பிடித்து செல்போன் செயலிக்கு அனுப்பும். அந்த செயலி, மலேரியாவுக்கு காரணமான பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிந்து தெரிவித்து விடும்.

இதுகுறித்து ஐஐஇஎஸ்டி பேராசிரியர் அரிந்தம் கூறியதாவது:

எங்களது கண்டுபிடிப்புக்கு ‘சென்டார்’ என்று பெயரிட்டுள்ளோம். ஒரு நுண்ணோக்கியை தயாரிக்க ரூ.80 செலவாகும். எனினும் மக்களுக்காக ரூ.10 விலையில் வழங்க முடிவு செய்துள்ளோம். அதன்படி ரூ.10 செலவில் பத்தே நிமிடங்களில் மலேரியா காய்ச்சலை கண்டு பிடித்துவிட முடியும். ரத்த பரிசோதனை முடிவு 90 சதவீதம் துல்லியமாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x